search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிகள்
    X
    மத்திய மந்திரிகள்

    முதலைக் கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சிகள் -மத்திய மந்திரிகள் பதிலடி

    பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    புதுடெல்லி

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கம் முதலே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகனை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டுவந்தனர். இதனால் 2 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது. 

    நேற்று முன்தினம் மாநிலங்களவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டனர். மேசைகள் மீது ஏறியும், புத்தகங்கள், அறிக்கைகளைக் கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எம்பிக்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில், அரசுக்கு எதிராக குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கையாள்வதற்காக பாராளுமன்ற பாதுகாப்பிற்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் அழைத்து வரப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 

    மேலும், மத்திய அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்பட்டதாகவும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் போன்ற முக்கியமான தேசிய பிரச்சனைகளை விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தெரிவித்த போதிலும், மழைக்கால கூட்டத்தொடரை வேண்டுமென்றே திசைதிருப்பியதாகவும் குற்றம் சாட்டியது.

    இந்த குற்றச்சாட்டிற்கு பிரஹலாத் ஜோஷி, அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்ட 7 மத்திய மந்திரிகள் பதிலடி கொடுத்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சிகள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

    மத்திய மந்திரி அனுராக் தாகூர்

    ‘நாட்டு மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு வழங்கி உள்ளனர்.  ஆனால், பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் எப்படி எதிர்க்கட்சிகள் முற்றிலும் சீர்குலைக்கின்றன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். எதிர்க்கட்சிகள் இப்போது முதலைக் கண்ணீர் வடிப்பதற்குப் பதிலாக, அவமானத்தை உணர்ந்து, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க முன்வர வேண்டும்’ என 
    அனுராக் தாகூர் 
    வலியுறுத்தினார்.

    மாநிலங்களவையில் சில எம்.பி.க்கள் மேஜைகளின் மேல் ஏறினர். அவர்கள் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதன் வீடியோவை எடுத்து ட்வீட் செய்தனர், என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

    ‘எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் பொருத்தமற்ற செயல். பர்னிச்சர்கள், கதவுகளை உடைத்தனர், அமைச்சர்களின் கையிலிருந்து பேப்பர்களை பறித்தனர், அவை பாதுகாவலர்களுடன் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். ஒரு பெண் பாதுகாவலரை காயப்படுத்தினர், பர்னிச்சர் மீது ஏறினர், மேசைகள் மற்றும் நாற்காலிகளை உதைத்தனர்... இது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை. அவர்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ என பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
    Next Story
    ×