search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்காரி
    X
    நிதின் கட்காரி

    இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்க தரத்தில் நெடுஞ்சாலைகள் - மத்திய மந்திரி தகவல்

    டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணி மிக விரைவாக நடைபெற்றுவருவதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் முதல்-மந்திரியாக விஜய் ரூபானி பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவுபெற்றதை குறிக்கும் விழா காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    அந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்டோருடன் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பங்கேற்றார். குஜராத்தின் தீசா நகரில் அமைக்கப்பட்டுள்ள 3.75 கி.மீ. உயர்த்தப்பட்ட 4 வழிச்சாலையை கட்காரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்க தரத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். முன்பு தினமும் 2 கி.மீ. வீதம் நெடுஞ்சாலைகள் அமைத்துக் கொண்டிருந்த நாம், தற்போது தினமும் 38 கி.மீ. வீதம் நெடுஞ்சாலைகள் அமைக்கிறோம்.

    மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் இமயமலை பகுதிகளை இணைக்கும்வகையில் நெடுஞ்சாலை அமைக்கும் பெரும் திட்டமான பாரத்மாலா பரியோஜனாவில் குஜராத்தில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேரடியாக வழிகாட்டி உதவ வேண்டும்.

    விஜய் ரூபானி

    டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணி மிக விரைவாக நடைபெற்றுவருகிறது. அதில், குஜராத்தின் வதோதரா-மும்பை இடையிலான 8 வழிச் சாலையும் ஒரு பகுதியாகும்.

    டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலை, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநில பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த நெடுஞ்சாலையால் புதிய வர்த்தக, தொழில் வாய்ப்புகள் உருவாகும். அவை விவசாயிகளுக்கு கைகொடுக்கும். ஒரு வளர்ச்சி எந்திரமாக அமையும் இந்த நெடுஞ்சாலை, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

    Next Story
    ×