search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உம்லிங்லா சாலை
    X
    உம்லிங்லா சாலை

    உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை... பொலிவியாவின் சாதனையை முறியடித்தது இந்தியா

    உம்லிங்லா பாஸ் சாலையானது லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கிழக்கு லடாக்கின்  உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், எல்லை சாலைகள் அமைப்பின் தீவிர முயற்சியால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 52 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தியா. பொலிவியா நாட்டில், 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. அதனை இந்தியா இப்போது முறியடித்துள்ளது.

    ஒரு பெரிய கமர்ஷியல் விமானமானது சாதாரணமாக 30,000 அடி உயரத்தில் பறக்கும். ஆனால் உம்லிங்லா பாஸ் சாலையானது இந்த விமானம் பறக்கும் உயரத்தின் பாதியைக் காட்டிலும் கூடுதலான உயரத்தில் அமைந்துள்ளது

    உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களின் உயரத்தைக் காட்டிலும் இந்த உம்லிங்லா பாஸ் சாலை உயரமானதாகும். நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் தெற்கு அடிவார முகாம் 17,598 அடி உயரத்திலும், திபெத்தில் உள்ள வடக்கு அடிவார முகாம் 16,900 அடி உயரத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உம்லிங்லா பாஸ் சாலையானது லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் சுமர் செக்டாரில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. லே பகுதியில் இருந்து சிசும்லே மற்றும் டெம்சோக் பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கிமீ சாலை புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

    இந்த பகுதியில் குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிடும். அப்படியொரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் அமைப்பு ஊழியர்கள் இந்த சாலையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×