search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்
    X
    கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்

    கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்

    கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார்.
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து பாரதிய ஜனதாவில் புதிய முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் தர்மேந்திரபிரதாப், கி‌ஷன் ரெட்டி ஆகியோர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் பெங்களூரில் உள்ள கேப்பிட்டல் ஓட்டலில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் சட்டமன்ற பாரதிய ஜனதா தலைவராக (முதல்-அமைச்சர்) பசவராஜ் பொம்மை
    தேர்வு செய்யப்பட்டார்.

    அதையடுத்து பசவராஜ் பொம்மை, எடியூரப்பா மற்றும் தலைவர்கள், கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

    பசவராஜ் பொம்மை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று பகல் 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

    அதன்படி இன்று கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி கூடத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    கவர்னர் தாவர் சந்த் கெலாட் பசவராஜ் பொம்மைக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய பாதுகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் தாவர் சந்த் கெலாட் இவருக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய பாதுகாப்பு பிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல்- மந்திரி மட்டுமே பதவி ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அப்போது துணை முதல்-மந்திரிகள், மற்றும் மந்திரிகள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். அப்போது புதிய மந்திரிகள் சிலரும் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சியில் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதாப், கி‌ஷன் ரெட்டி, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்குமார், கட்சி முன்னணி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு பசவராஜ் பொம்மை சட்டசபைக்கு சென்று முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு பல்வேறு பிரமுகர்களும், பிரபல நபர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். பதவி விலகிய எடியூரப்பா லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். எனவே லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மக்களில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தினர் ஆவர். பாரதிய ஜனதாவுக்கு அவர்களுடைய ஆதரவு உள்ளது. அந்த ஆதரவை இழந்துவிடாமல் இருக்கவே லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்- மந்திரியாக தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×