search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்பத்தினருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் பிரியா
    X
    குடும்பத்தினருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் பிரியா

    காப்பகத்தில் விட்டு சென்ற தந்தை- 17 ஆண்டுகளுக்கு பின்னர் தாயாரை கண்டுபிடித்த மாணவி

    பிரியா மற்றும் காப்பக நிர்வாகிகள் வயநாடு பனைமரம் பகுதியில் உள்ள பிரியாவின் தாய் மற்றும் சகோதரர் வசிக்கும் வீட்டிற்கு திடீரென வந்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காளி. இவர்களுக்கு சுனில், அனில், பிரியா என 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி காளியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் அடைந்த சுரேஷ் மகள் பிரியாவை வயநாடு பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் விட்டு விட்டு சென்றார். பிரியா அந்த காப்பகத்தில் தங்கி இருந்தே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.

    தற்போது முதுகலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பில் சூட்டிகையான பிரியாவுக்கு தனது தாயிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் தனது பெற்றோர் குறித்து பலரிடமும் விசாரித்தார்.

    இந்த நிலையில் அங்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தனது பெற்றோர் குறித்து கூறியுள்ளார். விசாரித்து சொல்வதாக கூறிய அவர் பிரியாவின் தாய் இருக்கும் இடத்தை விசாரித்து கண்டுபிடித்தார்.

    பின்னர் இதுகுறித்து பிரியா தங்கியுள்ள காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று பிரியா மற்றும் காப்பக நிர்வாகிகள் வயநாடு பனைமரம் பகுதியில் உள்ள பிரியாவின் தாய் மற்றும் சகோதரர் வசிக்கும் வீட்டிற்கு திடீரென வந்தனர்.

    முதலில் மகளை அடையாளம் காண முடியாத காளி, அவர்களிடம் விசாரித்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதில் பிரிந்த மகள் பிரியா என அடையாள கண்டு கண்ணீர் மல்க மகள் பிரியாவை கட்டி பிடித்து முத்தமிட்டார். அப்போது பிரியாவின் சகோதரர்கள் அனில் மற்றும் சுனிலும் சகோதரி பிரியாவை கண்டதும் ஆனந்த கண்ணீர் விட்டனர். 6 வயதில் குடும்பத்தினரை பிரிந்துச்சென்று 23 வயதில் மீண்டும் தாயாரிடம் மகள் வந்தது அந்த பகுதியில் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

    Next Story
    ×