search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    மத்திய மந்திரிசபை ஞாயிற்றுக்கிழமை மாற்றம்?- அ.தி.மு.க. இடம்பெற வாய்ப்பு

    மத்திய மந்திரிசபை மாற்றம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் மோடி மூத்த தலைவர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் மந்திரிசபை 2-வது தடவையாக 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி பதவி ஏற்றது. அதன் பிறகு இதுவரை மந்திரிசபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    மோடியின் மந்திரிசபையில் அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், லோக்ஜன சக்தி, இந்திய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

    இதில் அகாலிதளம், சிவசேனா கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி விட்டன. லோக்ஜனசக்தி சார்பில் மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் இறந்து விட்டார்.

    தற்போது கூட்டணி கட்சிகளில் குடியரசு கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மந்திரியாக இருக்கிறார்.

    புதிதாக பலருக்கு மந்திரி பதவி அளிக்கவும், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் மந்திரிசபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

    தற்போது மந்திரிசபையில் 53 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். சட்டப்படி 81 மந்திரிகள் வரை நியமிக்க முடியும். எனவே புதிதாக 28 மந்திரிகளை நியமனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த மாநிலங்களுக்கு கூடுதல் மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதில் உத்தரபிரதேசத்துக்கு அதிக மந்திரி பதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. வருண்காந்தி, ரீட்டா பகுகுனா உள்ளிட்ட 6 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்தபோது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு பிரதமர் மோடி ஒரு மந்திரி பதவி வழங்க முன்வந்தார். ஆனால் அதை நிதீஷ்குமார் ஏற்க மறுத்து விட்டார். அவர் 2 மந்திரி பதவிகள் வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் அப்போது மந்திரிசபையில் இடம்பெறவில்லை.

    ஆனால் இப்போது ஐக்கிய ஜனதாதளம் மந்திரி சபையில் இடம்பெற சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி

    காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யசிந்தியா பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு தற்போது எம்.பி. வழங்கப்பட்டுள்ளது. அவரும் மந்திரிசபையில் இடம்பெற உள்ளார்.

    அசாம் முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த் சோனாவால் கடந்த சட்டசபை தேர்தல் முடிவில் தனது முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தார். அவரையும் மந்திரிசபையில் சேர்க்க உள்ளனர்.

    அதேபோல பீகாரை சேர்ந்த சுஷீல்மோடி, முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் பிரீதம் முண்டே, நாராயண ரானே போன்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்கு எதிராக போராடிய பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. இதன்படி 3 பேருக்கு பதவி வழங்க உள்ளனர்.

    மந்திரிசபை மாற்றம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம் என்பது தொடர்பாக
    பிரதமர் மோடி
    மூத்த தலைவர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார். அதைத் தொடர்ந்து பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு கடந்த மந்திரி சபை பதவி ஏற்றபோது மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்ததால் வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால் இப்போது மந்திரி பதவி வழங்க மோடி முன்வந்துள்ளார்.

    பெரும்பாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாருக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×