search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா சிகிச்சையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு : 2-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்

    புரோஇன்பிளமேட்டரி சைட்டோகைன் என்ற சமிக்ஞை மூலக்கூறுகளை குறைத்து, நோயாளி விரைவில் குணம் அடைய உதவும் என்று தகவல்கள் கூறுகின்றன.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று சிகிச்சைக்கு இந்தியா ஏற்கனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ( டி.ஆர்.டி.ஓ.) அங்கமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்.), ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பவுடர் வடிவிலான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

    2-டிஜி என்று அழைக்கப்படுகிற இந்த மருந்தானது ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் விரைவாக மீண்டு வருவதற்கு பக்க பலமாக அமைகிறது. மேலும் ஆக்சிஜனை சார்ந்து நோயாளிகள் இருப்பதையும் குறைக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.), ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான லக்சாய் உயிர் அறிவியல்கள் நிறுவனத்துடன் சேர்ந்து புதிதாக ‘கொல்கிசின்’ என்ற மருந்தை கண்டுபிடித்து உள்ளது.

    இந்த மருந்துக்கான இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

    கோப்புப்படம்


    அதன்படி இந்த மருந்து, கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும்.

    அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மற்றொரு சார்பு நிறுவனமான ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் கல்வி நிறுவனமும், ஜம்முவின் சி.எஸ்.ஐ.ஆர். ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமும் இந்த மருத்துவ பரிசோதனைக்காக கை கோர்த்துள்ளன.

    இந்த மருந்து இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறபோது, கொரோனாவுடன் இணை நோயாக இதய நோயைக்கொண்டிருக்கிறவர்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படும். இது புரோஇன்பிளமேட்டரி சைட்டோகைன் என்ற ஒரு வகையான சமிக்ஞை மூலக்கூறுகளை குறைத்து, நோயாளி விரைவில் குணம் அடைய உதவும் என்று தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி லக்சாய் உயிர் அறிவியல்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராம் உபத்யாய் கூறும்போது, “இந்த மருந்தின் மருத்துவ பரிசோதனைக்காக நோயாளிகளை பதிவு செய்வது ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கி விட்டது. இந்த மருத்துவ பரிசோதனை 10 வாரங்களில் முடிந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் முடிவைப் பொறுத்தும், ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதல் அடைப்படையிலும் இது இந்திய மக்களுக்கு பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
    Next Story
    ×