search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடுப்பூசி திட்டத்துக்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத டோஸ்களை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
    புதுடெல்லி:

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் வகையில் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் இந்த இலவச தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு கிடைக்கும்.

    அந்தவகையில்தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத டோஸ்களை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி திட்டத்துக்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தேசிய தடுப்பூசிதிட்டத்தின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். இவற்றை முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போட வேண்டும்.

    * 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் முன்னுரிமை பயனாளர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

    * மக்கள் தொகை, தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளின் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும்.

    * தடுப்பூசி வீணாதல் ஒதுக்கீட்டை பாதிக்கும். அந்த வகையில் தடுப்பூசி டோஸ்கள் வீணானால் ஒதுக்கீடு குறைக்கப்படும்.

    கோப்புப்படம்


    * தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் வசதிகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் கோவின் இணையதளம் வசதியை அளித்திருக்கும் அதேவேளையில், அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களிலும் தனிநபர் மற்றும் பிரிவினருக்கு முன்பதிவு செய்தவுடனே
    தடுப்பூசி போடும் வசதியையும் செயல்படுத்த வேண்டும்.

    * வருமான நிலையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி பெற உரிமை உண்டு. எனினும் பணம் செலுத்த வசதி உள்ளவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் போட ஊக்குவிக்க வேண்டும்.

    * உற்பத்தி மற்றும் புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மாத உற்பத்தியில் 25 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும்.

    * தனியார் தடுப்பூசி மையங்களில் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் வவுச்சர்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

    * பெரிய-சிறிய தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே தடுப்பூசிகளை சமமாக வினியோகிப்பதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.

    * தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி டோசுக்கான விலையை ஒவ்வொரு தடுப்பூசி உற்பத்தியாளரும் அறிவிக்க வேண்டும். இடையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

    * தடுப்பூசிக்காக மக்கள் முன்பதிவு செய்வதற்கு மாநிலங்கள் பொதுவான சேவை மையங்கள் மற்றும் அழைப்பு மையங்களை பயன்படுத்தலாம்.

    இவ்வாறு மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×