search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகள் ரத்தா?: மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பதிலளித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளது. தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக உள்ளது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுமா அல்லது சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்தானது போல எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என்று மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பலத்த கேள்வி எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பரவலை அடுத்து மத்திய அரசு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து மிக விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

    இந்த தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள், கல்வி நிபுணர்கள் மற்றும் பெற்றோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் கருத்துகளை கேட்டு வருகிறோம். மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் எதிர்காலம் கருதியும் இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் குறித்து அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளதால், தேர்வு நடைபெறுமா? என்று மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தாமல், தேர்வுகள் குறித்து அரசு தெளிவான முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×