search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    பொருளாதாரம் குறித்து நிபுணர்களின் ஆலோசனையை மத்திய அரசு கேட்க வேண்டும் - ப.சிதம்பரம்

    நாடு ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கிறது.
    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது, நிபுணர்களின் ஆலோசனையை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

    நாடு ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கிறது.

    இதையொட்டி மத்தியில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

    அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தையொட்டிய வரைபடத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், “பிரதமருக்கு மிக மோசமான அவமானம், குறைவான உள்நாட்டு மொத்த உற்பத்தி, அதிகளவிலான வேலையில்லா திண்டாட்டம்” என விமர்சித்துள்ளார்.

    இதற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 காலாண்டு பொருளாதார செயல்திறனை பார்க்கிறபோது, 2020-21 நாற்பதாண்டு கால பொருளாதாரத்தில் மிக இருண்ட ஆண்டு ஆகும். அதே போன்று 2021-22 நிதி ஆண்டும் போய்விடக்கூடாது. மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும்.

    தற்போதையை பொருளாதார நிலைக்கு காரணம், கொரோனா பெருந்தொற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அதனுடன் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசின் திறமையின்மையும், திறமையற்ற பொருளாதார நிர்வாகமும் சேர்ந்துள்ளது.

    புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் நல்ல யோசனைகள் இதுவரை மறுக்கப்பட்டுள்ளன. உலகளவிலான அனுபவங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

    நிதி விரிவாக்கம், பணப்பரிமாற்றம் தொடர்பான யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆத்மநிர்பார் (சுய சார்பு) போன்ற வெற்றுப்பொதிகள் தட்டையாகி விட்டன.

    நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பணத்தை அச்சிடவும், செலவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

    ஆனால் நிதி மந்திரி இப்போதும் தனது தவறானதும், பேரழிவை ஏற்படுத்தத்தக்கதுமான கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் பத்திரிகைகளுக்கு நீண்ட பேட்டிகளை அளித்துள்ளார்.

    ஆனால் அரசு செலவினம் அதிகரிப்பதும், ஏழைகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்வதும், ரேஷனில் தாராளமாக வினியோகம் செய்வதும் பொருளாதாரத்துக்கு தேவையானது ஆகும்.

    எங்கள் வேண்டுகோள்கள் அவர்கள் காதுகளில் விழவில்லை. இதனால் பொருளாதாரம் 7.3 சதவீத எதிர்மறை வளர்ச்சியை (வீழ்ச்சி) சந்தித்துள்ளது.

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு சலுகைகள் வழங்குவது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் நிதி மந்திரி பதில் அளிக்கவில்லை.

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் அலட்சியமாக, அவமதிப்பாக நடத்தப்படுவதாக கருதுகிறேன்.

    வேலையில்லா திண்டாட்டம் 11 சதவீதத்தை தாண்டி விட்டது. தொழிலாளர்கள் சக்தி பங்கேற்பு குறைகிறது. ஏராளமானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதெல்லாம் பொருளாதாரம், மிக மோசமான நிலையில் இருப்பதையே காட்டுகின்றன. ஏழை மக்களின் ஆழ்ந்த துயரத்தை சுட்டிக்காட்டுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×