search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி போடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திரபட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.

    இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில், கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள், ஊரகப்பகுதிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், இவை குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளனவா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

    மேலும் கொரோனா தடுப்பூசிகளின் விலைகளை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கு உள்ள பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரெம்டெசிவிர் உள்ளிட்ட பிற மருந்துகளின் விலை விண்ணை எட்டியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்


    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ‘கோவின்’ செயலி அல்லது இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு இடையே இணைய பயன்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினர்.

    இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் மீனாட்சி அரோரா தனது வாதத்தில், ‘கொரோனா தடுப்பூசிகளுக்கு உள்ள விலை வேறுபாடுகள் குறித்தும், ‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு, அரசு மையங்களில் இருந்து அழைப்புகள் வராமல், தலா 900 ரூபாயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து அழைப்புகள் வருகிறது’ என்று தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், ‘தடுப்பூசிக்கான விலை ரூ.900 என நிர்ணயிக்கப்பட்டது அல்ல. தனியார் ஆஸ்பத்திரிகள் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கக்கூடும். இந்த விலையை மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை, அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கியுள்ளது’ என்றும் தெரிவித்தனர்.

    ‘கோவின்’ செயலியில் பதிவு செய்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி, நேரம் ஒதுக்கப்படாமல் இருப்பதையும் ஒப்புக்கொண்ட நீதிபதிகள், ஒத்த வயது பிரிவினருக்கு இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கை இருக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தனர்.

    இதற்கிடையே மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், ‘பைசர் போன்ற தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை சாதகமாகும்பட்சத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×