search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா?

    கொரோனா இரண்டாம் அலையின் வேகம் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    புதுடெல்லி:

    கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்தது.

    தொடர்ந்து உயர்ந்த பாதிப்பால் இம்மாத தொடக்கத்தில் தொடர்ந்து 4 நாட்கள் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதிலும் குறிப்பாக 7-ந் தேதி ஒரேநாளில் 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டது இதுவரை ஒருநாள் பாதிப்பில் உச்சமாக உள்ளது.

    இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதன் பயனாக பல மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது.

    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறை தகவல்படி, நேற்று புதிதாக 3,26,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தகவல்களை தெரிவிக்கும் 'www.covid19india.org' என்ற வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று முன்தினம் நாடு முழுவதும் 18,75,515 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையிலும் பாதிப்பு 3.26 லட்சமாக சரிந்திருப்பது இரண்டாம் அலையின் பரவல் வேகம் குறைந்து வருவதை காட்டுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    ஏற்கனவே இரண்டாம் அலையின் வேகம் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது பல மாநிலங்களிலும் பரவல் வேகம் தொடர்ந்து சரிந்து வருவதால், இரண்டாம் அலை உச்சத்தை கடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக ஆய்வுகள் நடத்திய பிறகே முழு நிலவரம் தெரிய வரும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது.

    நேற்று அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,779, மகாராஷ்டிரத்தில் 39,923, கேரளாவில் 34,694, தமிழ்நாட்டில் 31,892, ஆந்திராவில் 22,018, மேற்கு வங்கத்தில் 20,846, உத்தர பிரதேசத்தில் 15,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 53,09,215, கர்நாடகாவில் 21,30,267, கேரளாவில் 20,85,584, உத்தரபிரதேசத்தில் 15,96,627, தமிழ்நாட்டில் 15,31,377, ஆந்திராவில் 13,88,803, டெல்லியில் 13,80,981, மேற்கு வங்கத்தில் 10,94,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 68 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அங்கு மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு இரண்டாவது முறையாக தினசரி பாதிப்பு நேற்று 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

    இதேபோல டெல்லியில் ஏப்ரல் 10-ந் தேதிக்கு பிறகு முதல்முறையாக நேற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. உத்தரபிரதேசத்திலும் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று பாதிப்பு 15 ஆயிரமாக சரிந்தது. சத்தீஸ்கர், அரியானா, குஜராத், பீகார், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 695, கர்நாடகாவில் 373, உத்தரபிரதேசத்தில் 311, டெல்லியில் 289, தமிழ்நாட்டில் 288 பேர், சத்தீஸ்கரில் 172, பஞ்சாபில் 180, உத்தரகாண்டில் 181, அரியானாவில் 164, ராஜஸ்தானில் 155, மேற்கு வங்கத்தில் 136, குஜராத்தில் 104 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3,876 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,66,229 ஆக உயர்ந்தது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 79,552, கர்நாடகாவில் 21,085, உத்தரபிரதேசத்தில் 16,957, தமிழ்நாட்டில் 17,056, டெல்லியில் 20,907, மேற்கு வங்கத்தில் 12,993, சத்தீஸ்கரில் 11,461, பஞ்சாபில் 11,477 பேர் இறந்துள்ளனர்.

    நேற்றும் பாதிப்புகளைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில், நேற்று நாடு முழுவதும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 850 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 4 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி சுமார் 36 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×