search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதவியாளர்கள் அனுப்பிய புகார் மனு.
    X
    உதவியாளர்கள் அனுப்பிய புகார் மனு.

    தேர்தல் செலவின பார்வையாளர் மீது 42 உதவியாளர்கள் பரபரப்பு புகார்- ஷூவுக்கு பாலீஸ் போட சொல்கிறார்

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் மீது உதவியாளர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம:

    கேரள சட்டசபைக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க தேர்தல் கமி‌ஷன் சார்பில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    பொது பார்வையாளர், செலவின பார்வையாளர் என தேர்தல் கமி‌ஷனால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணித்து குறிப்பெடுத்து வருகிறார்கள்.

    கேரளாவில் நடைபெறும் தேர்தலை கண்காணிக்கவும் வெளிமாநிலங்களில் இருந்து பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் இடுக்கி மற்றும் உடும்பன்சோலை தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்ட அதிகாரி, அந்த தொகுதிக்கு சென்று அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களை கண்காணித்து வந்தார்.

    இந்த அதிகாரிக்கு உதவியாக இரு தொகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தேர்தல் செலவின பார்வையாளருடன் சென்று அவரது பணிக்கு உதவியாக இருந்து வந்தனர்.

    இவர்களில் 42 பேர் தேர்தல் கமி‌ஷனுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில் தேர்தல் செலவின பார்வையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:-

    தேர்தல் செலவின பார்வையாளர் தனது தேவைக்காக விலை உயர்ந்த பல பொருட்களை வாங்குகிறார். அதற்கான பணத்தை கொடுக்கும்படி எங்களிடம் கூறுகிறார்.

    பணிக்கு செல்லும்போது, அவரது ஷூவை பாலீஸ் போடவும் சொல்கிறார். தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் இருந்த ஊழியர்களின் வாகனத்தை வாங்கி கொண்டு அவர் குடும்பத்துடன் மதுரைக்கும் சென்று வந்தார்.

    தொகுதியில் அவருக்காக ஒதுக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் போதுமான வசதிகள் இல்லை என்று கூறி, லாட்ஜில் அறை எடுத்து தரும்படி எங்களை வற்புறுத்துகிறார்.

    அதோடு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படுமாறும் கூறுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் மீது உதவியாளர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×