search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு பிரசாரம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    தண்ணீரை பாதுகாக்கும் உறுதிமொழி நாடு முழுவதும் பிரசாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் தங்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்
    புதுடெல்லி:

    உலக தண்ணீர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மெய்நிகர் முறையில் நடந்த இந்த நிகழ்வில் ராஜஸ்தான், உத்தரகாண்ட், கர்நாடகா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று மழைநீர் சேகரிப்பு அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் பிரதமர் மோடி முன்னிலையில், கென்-பெட்வா இணைப்பு திட்டம் மற்றும் நதிநீர் இணைப்புக்கான தேசிய முன்னோக்கு திட்டத்தின் முதல் திட்டம் ஆகியவை தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய ஜலசக்தி மந்திரி கஜேந்திர சிங் செகாவத்துடன் மத்திய பிரதேசம், உத்தரபிரதேச முதல்-மந்திரிகள் கையெழுத்து போட்டனர்.

    பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியாவில் மழைநீரின் பெரும்பகுதி வீணாகிறது. மழைநீரை இந்தியா சிறப்பாக நிர்வகித்தால், நாடு நிலத்தடி நீரை சார்ந்திருக்கும் நிலை குறையும். எனவே மழைநீர் சேகரிப்பு முயற்சிகள் பருவமழை வரை தொடரும்.

    பருவமழை வரும்வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான ஒவ்வொரு காசும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டும்.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக தண்ணீர் பிரச்சினைக்கான சவால்களும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். வரும் தலைமுறையினருக்காக நாட்டின் தற்போதைய தலைமுறையினர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

    வலிமையான நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் வேகமான வளர்ச்சி சாத்தியமில்லை. நீர் பாதுகாப்பு மற்றும் நீர் இணைப்பை சார்ந்தே நாட்டின் தன்னிறைவு இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு மட்டுமின்றி நதிநீர் மேலாண்மை குறித்தும் பல பத்தாண்டுகளாக இந்தியா விவாதித்து வருகிறது.

    தண்ணீரை பாதுகாக்கும் உறுதிமொழி நாடு முழுவதும் பிரசாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் தங்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீருக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நமது இயல்பு மாறும்போது, இயற்கையும் நம்மை ஆதரிக்கும்.

    கென்-பெட்வா இணைப்பு திட்டம் செயல்வடிவம் பெறுவதற்காக மத்தியபிரதேச, உத்தரபிரதேச அரசுகளை பாராட்டுகிறேன். இந்த மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான குடும்பத்தினர் தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நனவாக்குவதில் இந்த ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மழைநீர் சேகரிப்பு பிரசாரம் நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வருகிற நவம்பர் 30-ந்தேதி வரை அதாவது பருவமழைக்கு முந்தைய காலம் மற்றும் பருவமழைக்காலம் வரை மேற்கொள்ளப்படும்.

    இதில் அடிமட்ட நிலையில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் மழைநீரை முறையாக சேமித்து வைப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்துவித பருவநிலை காலங்கள் மற்றும் மண் அடுக்குகளுக்கு ஏற்ற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தும் நோக்கம் கொண்டது ஆகும்.
    Next Story
    ×