search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் சேகரிப்பு"

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், மழைநீர் உயிர் நீர். வடகிழக்கு பருவமழைக் கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    இதில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர், துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார்செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களை கொண்டு எளிதாக கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியது.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் –சேகரிப்பின் முக்கியத்துவம் பொருள் குறித்தும், இது சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மேற்காணும் பொருள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எல்இடி., ஊர்தி மூலம் விழிப்புணர்வு ஓட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் மழைநீரின் முக்கியத்துவத்தை அறிந்து மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    தற்போது மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. தொடர்ந்து சமூகநலத்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியில் தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியார்கள் மாதேஸ்வரன், கண்ணன், உதவி செயற்பொறியார்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும் சசிக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
    • திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால் கூறுகையில், மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும்.

    வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.

    மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.

    மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.

    திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.

    மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று பேசினார்.

    விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், நேரு யுவகேந்திரா இளைஞர் நல தலைவர் பிரேம் பாரத்குமார் மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் வேல்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.

    கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன் வாழ்த்துரை கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஸ்டீபன், விக்டர், ஆண்டனி, சரவணகுமார் ஆகியோர் மற்றும் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா, ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.

    • ஊராட்சிகளில் மார்ச் 22-ந் தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன.
    • உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பூர் :

    தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடி க்கப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் மார்ச் 22-ந்தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்நாளில் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாயமான மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மழை நீரை சேமிப்போம்,நிலத்தடி நீரை பாதுகாப்போம் என காலம் காலமாக கூறப்பட்டு தான் வருகிறது. ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த ப்படுவதில்லை. குடியிருப்புகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இக்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலேயே கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன்படி அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் ,பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் கட்டமைப்பு நிறுவ உத்தரவிடப்பட்டது. இக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    இதன் பிறகு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கட்டமைப்புகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. இன்றைய சூழலில் போதிய பருவ மழை கிடைக்காவிட்டாலும், நிலத்தடி நீர்தான் மக்களுக்கு ஆதாரமாக உள்ளன.

    உரிய காலத்தில் கிடைக்கும் மழை நீரை சேமிக்காவிட்டால் வறட்சி காலங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீர் சேமிப்பானது வெறும் விழிப்புணர்வுடன் நின்று விடாமல் இதை சட்டமாக இயற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் தண்ணீர் அவசியத்தை உணர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டாயமா க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.
    • காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும்.

    உடுமலை :

    கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-

    கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.

    இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.

    சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மழைக்காலங்களில் சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும்.
    • பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகள் மழைக்காலங்களில் வெள்ளைக்காடாக மாறிவிடும். குறிப்பாக சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும். இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்படும்.

    இந்த நிலையில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த அடிப்படையில் சாலை ஓரங்களில் மட்டும் 150 இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செயற்பொறியாளர் சிவ பாதம் இன்று தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது,

    மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சாலையோரம் 40 மீட்டர் ஆழத்துக்கு குழாய் பதிக்கிறோம். அதன் பக்கவாட்டில் ஓட்டைகள் போடப்படுகிறது. பின்னர் அந்த குழாயில் மணல் அல்லது ஜல்லி நிரப்பி விடுகிறோம். இதன் மூலம் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல வாய்ப்பு உருவாகிறது.

    பாதாள சாக்கடை திட்ட பணிகளால் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சில இடங்களில் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்தது. அதனையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம்.

    மாநகராட்சியின் 375 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளன. ஆகவே இந்த முறை மழைக்காலங்களில் சாலைகளில் அதிகம் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.

    இந்த மாநகராட்சி பொருத்தமட்டில் 23 ஆயிரத்து 746 வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. மேலும் அதன் முக்கியத்துவத்தை மாநகர வாசிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    • ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.
    • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் முதலிபாளையம் பிரிவு அருகே பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2014ம் வருடம் இரு ஆழ்துளை கிணறுகள் 1100 அடி மற்றும் 800 அடி ஆழத்திற்கு நீர் தேவைக்காக அமைக்கப்பட்டது‌.ஆனால் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் கோடை காலத்தில் வறண்டு போவதும் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் இருந்ததால், இதனை மூடிவிட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது.

    இப்பள்ளி அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதி மிக மேடான பகுதியாகவும்,ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் முடிவு குறித்து அறிந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்,இந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீரை சேமிக்க பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார்.

    இதனை அடுத்து மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் பயன் குறித்து செய்முறையாக அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை அப்பள்ளி செயல் படுத்தியது.அதன்படி பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் ஆயிரம் அடி ஆளமுள்ள இரு ஆழ்துளை கிணற்றையும் மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக பள்ளிக் கட்டிட கூரைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் விழும் மழை நீரை ஆழ்துளை கிணற்றில் சேகரமாகும் வகையில் மாற்றி அமைத்தது.மேலும் மழைநீர் மட்டும் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்‌.

    கடந்த 2015 முதல் இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டது‌.இதனால் பள்ளி வளாகத்தில் பெய்யும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டது‌. தொடர்ச்சியாக இவ்வாறு மழை நீர் பல வருடமாக உரிய வழிமுறைகளுடன் சேகரிக்கப்பட்டதால் இன்று அப்பள்ளியை சுற்றி உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இது பள்ளி மாணவர்களால் ஆதாரப்பூர்வமாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு கோடையில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் மட்டம் இருந்தது.தற்போது அந்த கிணற்றில் தற்போது 40 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.மேலும் நீர் மாசடையாமல் கண்ணாடி போல் தெளிவாகவும்,உப்புத்தன்மை முற்றிலும் இன்றி உள்ளது.இதேபோல் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லிலும் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும்,3 ஆண்டாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பல கோடி லிட்டர் மழை நீரை இப்பள்ளியில் கைவிடப்பட இருந்த ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டதால் இன்று பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இப்பள்ளியின் மாணவர்கள் இந்த திட்டம் குறித்து மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்து பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

    இதை பின்பற்றி தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் கண்டறிந்து, நிலத்தடி நீர் சேமிப்பு மையங்களாக மாற்றி,வருடம் ஒரு முறை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் என்.எஸ்.எஸ் முகாம் மூலம்,இந்த கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

    ×