
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 93 ஆயிரத்து 913 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 567 பேர் பாதிப்பில் இருந்து குணமானார்கள். இதுவரை 19 லட்சத்து 92 ஆயிரத்து 530 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 48 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 40 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 753 ஆகி உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 95.16 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.47 விகிதம் பேர் பலியாகி இருக்கிறார்கள். மாநிலத்தில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 52 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 13.38 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நகரில் 897 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 3 லட்சத்து 18 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 438 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையே மும்பை மாநகராட்சி கடந்த 2 நாளில் 984 கட்டிடங்களுக்கு சீல் வைத்து உள்ளது. கடந்த 18-ந் தேதி நிலவரப்படி மும்பையில் தொற்று பரவலை கட்டுபடுத்த 321 கட்டிடங்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 1,305 ஆக அதிகரித்து உள்ளது. நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலமும் 371 நாட்களாக குறைந்து உள்ளது.