search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    காங்கிரஸ் எம்.பி.யை புகழ்ந்தபோது கண் கலங்கிய பிரதமர் மோடி

    காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பாராளுமன்ற மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் இன்று முடிவடைகிறது.

    அவருடன் காஷ்மீரை சேர்ந்த மேலும் 2 எம்.பி.க்களின் பதவியும் முடிகிறது. இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை அளித்தபோது பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

    குலாம்நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டார். குலாம்நபி ஆசாத் காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது சுற்றுலா பயணிகள் தவித்தனர். அப்போது அவர்களை மீட்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை கூறியபோது மோடி கண்கலங்கினார்.

    அவருக்கு தான் நன்றி கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மோடி கூறியதாவது:-

    குலாம்நபி ஆசாத் சிறந்த மனிதர். அவருக்கு கர்வம் எப்போதும் இருந்தது இல்லை. அரசியல் ரீதியாக முக்கிய ஆலோசனைகளை அவர் பலமுறை எனக்கு கூறி உள்ளார்.

    எந்த பதவியில் இருந்தாலும் அவருக்கு தலைக்கனம் இருந்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேல்சபையில் மோடி கண்கலங்கி குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தபோது அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டினர். குலாம்நபி ஆசாத்தும் பதிலுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இதற்கிடையே பாராளுமன்ற மேல்சபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசும்போது குலாம்நபி ஆசாத்தை பாராட்டினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

    குலாம்நபி ஆசாத் மென்மையாக பேசக்கூடியவர். கண்ணியமான நபர். யாரையும் புண்படுத்த மாட்டார்.

    அவருக்கு கடினமான வார்த்தைகளை பயன்படுத்த தெரியாது. இதனால் மற்ற எம்.பி.க்கள் குலாம்நபி ஆசாத்திடம் இருந்து கண்டிப்பாக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரை பின்பற்ற வேண்டும்.

    காஷ்மீரில் தேர்தல் நடத்தியதற்காக அவர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்காக நான் அவரை மதிக்கிறேன். இதை உங்கள் (காங்கிரஸ்)கட்சியை சேர்ந்தவர்கள் சரியான உத்வேகத்துடன் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியில் சீர்திருத்தம் அவசியமானது என்று கூறியும் கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×