search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் - பிரதமர் அழைப்பை ஏற்று விவசாய சங்கங்கள் அறிவிப்பு

    மாநிலங்களவையில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

    நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு விரும்புகிறது. விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர்.

    விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் தேவை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறைந்தபட்ச ஆதார விலை இருந்தது. இப்போதும் இருக்கிறது, இனி வரும் காலங்களிலும் இருக்கும்.

    வேளாண் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம். வேளாண் சட்டங்களில் குறைகள் இருந்தால் நிச்சயமாக சரிசெய்யப்படும். ஏழைகளுக்கான குறைந்த விலை ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும். வேளாண் கொள்முதல் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாய சங்கங்கள் திங்கள்கிழமை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டன.

    சமியுக்தா கிசான் மோர்ச்சாவின் மூத்த உறுப்பினரான விவசாயிகள் தலைவர் சிவ்குமார் கக்கா கூறுகையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு  தயாராக இருக்கிறோம். கூட்டத்தின் தேதி மற்றும் நேரத்தை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். நாங்கள் ஒருபோதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கவில்லை. அது எங்களை பேச்சுவார்த்தைக்கு  அழைத்த போதெல்லாம், நாங்கள் மத்திய மந்திரிகளுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் (அரசு) பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
    Next Story
    ×