search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலேக்கியா, சாய் திவ்யா
    X
    அலேக்கியா, சாய் திவ்யா

    ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் திரும்பவும் உயிர்பெறுவோம் என நம்பியுள்ளனர் - போலீஸ் தகவல்

    ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் திரும்பவும் தாங்கள் உயிர்பெறுவோம் என நம்பி இருந்துள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
    சித்தூர்:

    ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி துணை முதல்வர் வி.புருசோத்தம் நாயுடு- பள்ளி முதல்வரான அவரது மனைவி பத்மஜா, தமது 2 மகள்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நரபலி கொடுத்தனர்.

    ஆந்திராவையும் தாண்டியும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீசார், புருசோத்தம்-பத்மஜா தம்பதியை கைது செய்து கோர்ட்டு காவலில் சிறையில் அடைத்தனர்.

    குடும்பத்துடன்


    இந்நிலையில் இதுதொடர்பாக சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தங்கள் மகள்களை ஏன் கொன்றோம் என்று புருசோத்தமும், பத்மஜாவும் ஒரே மாதிரி வாக்குமூலம் அளித்தனர். அத்தம்பதிக்கு ஏதாவது மனநல பிரச்சினை இருக்கலாம். ஆனால் அவர்களிடம் அதீத மூடநம்பிக்கையும், மிதமிஞ்சிய பக்தியும் காணப்படுகிறது.

    தங்கள் மகள்களின் உடம்பில் தீயஆவிகள் குடிகொண்டிருக்கின்றன, மரணத்துக்குப் பின் அத்தீய ஆவிகளிடம் இருந்து விடுபட்டு அவர்கள் புதிதாக உயிர்பெறுவார்கள் என்ற மாயையான நம்பிக்கை அந்தப் பெற்றோரிடம் இருந்திருக்கிறது. அதே நம்பிக்கையை, பலியான அந்தப் பெண்களும் கொண்டிருந்ததாக தெரிகிறது.

    மகள்கள் இருவரும் மறுபடியும் உயிர்பெற்ற பிறகு, நான்கு பேரும் எப்போதும் போல் சந்தோஷமாக வாழ்வோம் என்று புருசோத்தமும், பத்மஜாவும் நம்பியிருக்கின்றனர். ஆனால் அது ஒருவிதமான வக்கிரமான நம்பிக்கை.

    கணவன்-மனைவியின் மனநிலை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.’

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், நரபலி கொடுக்கப்பட்ட அலேக்கியா, சாய் திவ்யாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உள்ளூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. அங்கு தாய் பத்மஜாவை விடுத்து தந்தை புருசோத்தம் மட்டும் போலீசாரால் அழைத்து வரப்பட்டிருந்தார். உறவினர்களுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்து உடல்களுக்கு தீ மூட்டிய புருசோத்தம், ‘எங்கள் மகள்களை அநியாயமாக கொன்றுவிட்டோம். நாங்கள் உயிர் வாழவே கூடாது’ என்று அழுது புலம்பினார்.
    Next Story
    ×