search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒவ்வாமை உடையவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போடக்கூடாது - புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

    ஒவ்வாமை உடையவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போடக்கூடாது என்று புனே மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கூட்டாக உருவாக்கி, புனே இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது. இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி அளித்தது. ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி இதுவரையில், 3 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 580 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புனே இந்திய சீரம் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    கோவிஷீல்டு தடுப்பூசியில் எல்-ஹிஸ்டைடின், எல்-ஹிஸ்டைடின் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மெக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசார்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டிசோடியம் எடிட்டேட் டைஹைட்ரேட் (ஈடிடீஏ), தண்ணீர் ஆகியவை அடங்கி உள்ளன.

    இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்துப்பொருட்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உடையவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது.

    தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்பாக எந்த மருந்து, உணவு, தடுப்பூசி அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் மருந்து பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதுபற்றி சுகாதார பணியாளரிடம் கண்டிப்பாக கூறி விடுங்கள்.

    மேலும் காய்ச்சல் இருந்தால், ரத்த கோளாறு இருந்தால், நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருந்தால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தினால் நோய் எதிர்ப்புச்சக்தி குறையும் நிலை இருந்தால் அது பற்றியும் கண்டிப்பாக தெரிவித்து விட வேண்டும்.

    பெண்கள் கர்ப்பம் அடைந்திருந்தாலும், கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலும், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டினாலும் அதுபற்றியும் முதலிலேயே தெரிவித்து விட வேண்டும்.
    Next Story
    ×