search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர் மரணம் - உயர்மட்ட விசாரணை

    உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். இதுபற்றி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மொரதாபாத்:

    உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். இதுபற்றி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது.

    அன்றைய தினம், உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் உள்ள அரசு தீனதயாள் உபாத்யா ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் ஊழியராக (வார்டு பாய்) இருந்து வந்த மகிபால் (வயது 46) என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவர் இருமல், காய்ச்சல், சுவாச பிரச்சினை ஆகியவற்றால் அவதிப்பட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இரவில் அவர் மரணம் அடைந்தார். இது அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி போட்டதின் காரணமாக மகிபால் இறந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மிலிந்த் சந்திர கார்க் கூறும்போது, மகிபாலின் மரணத்துக்கு காரணம், அவரது இதயத்தில் இருந்த பிரச்சினைதான். அவரது இதயம் பெரிதாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இதயத்தில் ரத்த கட்டிகள் இருந்தன என கூறப்பட்டுள்ளது. அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது என கூறி உள்ளார்.

    மகிபால் பிரேத பரிசோதனையை 3 டாக்டர்கள் நடத்தி உள்ளனர். அவரது சாவுக்கு காரணம், இதய நுரையீரல் நோய், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில ஊழியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மிலிந்த் சந்திர கார்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

    மரணம் அடைந்த மகிபால் மகன் விஷால் கூறுகையில், என் அப்பா சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு, என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார். அவர் இருமலால் அவதிப்பட்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டதும் அவருக்கு காய்ச்சலும், சுவாசிப்பதில் பிரச்சினையும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இரவில் அவர் மரணம் அடைந்தார் என தெரிவித்தார்.

    மேலும், மகிபாலுக்கு இதய நோய் இல்லை என்றும், அவர் காய்ச்சல் மற்றும் இருமல் தவிர்த்து ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கலெக்டர் ராகேஷ் சிங் கூறும்போது, தடுப்பூசி பாதுகாப்பானது. பக்க விளைவுகள் குறித்து புகார்கள் இல்லை. மகிபால் பிரச்சினை விதிவிலக்கானது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டார்.
    Next Story
    ×