search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான கண்காட்சி தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
    X
    விமான கண்காட்சி தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்: எடியூரப்பா பங்கேற்றார்

    வருகிற பிப்ரவரி 3-ந் தேதி தொடங்கும் பெங்களூரு விமான கண்காட்சி குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.
    பெங்களூரு :

    13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி வருகிற பிப்ரவரி 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் பெங்களூரு எலங்கா விமானப்படை தளத்தில் நடக்கிறது. இந்த விமான கண்காட்சி வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கண்காட்சி நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை 3 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளன.

    கண்காட்சி தொடங்குவதற்கான நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெங்களூரு வந்தார். இங்கு முதல்-மந்திரி எடியூரப்பாவை விதான சவுதாவில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு எடியூரப்பா மைசூரு தலைப்பாகை, சால்வை அணிவித்து பாரம்பரிய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு விதான சவுதாவில் விமான கண்காட்சி தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் அதன் தலைவரான ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்புத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விமான கண்காட்சியின் போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ராஜ்நாத்சிங், அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு சென்று, அங்கு ஆளில்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில் என்ஜினை நேரில் பார்வையிட்டார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தின் உற்பத்தி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கு இந்தியாவின் முதல் ஆளில்லா மெட்ரோ ரெயில் என்ஜின் பெட்டியை திறந்து வைத்தேன். அந்த நிறுவனத்தில் என்ஜினீயர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்துள்ள பணியை கண்டு பெருமை அடைகிறேன். தற்சார்பு இந்தியாவின் உண்மையான போராளிகள் இந்தியாவை முன்னேற்ற செய்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×