search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு - கோவாக்சின்
    X
    கோவிஷீல்டு - கோவாக்சின்

    கொரோனா தடுப்பூசிகளை உலக அளவில் கொண்டு சேர்ப்போம் - சீரம் மற்றும் பாரத் பயோடெக் இணைந்து கூட்டறிக்கை

    கொரோனா தடுப்பூசிகளை உலக அளவில் கொண்டு சேர்ப்போம் என சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு ஆகும்.

    இதற்கிடையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் 2 கோரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    ஆனால், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்த இரு மருந்து நிறுவனங்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் போட்டி ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மருந்தை ஒருவர் விமர்சனம் செய்து வந்தனர்.

    கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா கூறும்போது, ‘‘ உலகிலேயே அமெரிக்காவின் பைசர் நிறுவனம், மாடர்னா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு (கோவிஷீல்டு) ஆகியவற்றின் மருந்துகள் மட்டுமே முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அதன் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற மருந்துகள் எல்லாம் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் போன்றது’’ என்று கூறினார்.

    அவர் கோவேக்சின் மருந்தை குறைகூறும் வகையிலேயே இந்த கருத்தை வெளியிட்டார். அதாவது கோவேக்சின் திறன் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அதன் திறன் சரியாக இருக்காது என்பதுபோல தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

    இது கோவேக்சின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பதிலுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், எங்கள் தடுப்பூசியை சிலர் (கோவிஷீல்டு மருந்து நிறுவனம்) தவறாக விமர்சித்து இருக்கிறார்கள். எங்கள் தடுப்பூசி தண்ணீர் போல இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் நாங்கள் தடுப்பூசி பரிசோதனைகளை 200 சதவீதம் நேர்மையாக நடத்தி உள்ளோம். அதன் திறன் பற்றிய விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.

    சீரம் மற்றும் பாரத் பயோடெக் தலைவர்கள்

    நாங்கள் தவறு செய்திருந்தால் சுட்டிகாட்டுங்கள். எங்கள் ஊசி தண்ணீர் போன்றது என்று கூறியதை நாங்கள் மறுக்கிறோம். நாங்கள் விஞ்ஞானிகள். பாரத்பயோடெக் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம்.

    நாங்கள் கடந்த காலங்களில் பல ஆற்றல் வாய்ந்த, பாதுகாப்பான தடுப்பூசிகளை தயாரித்துள்ளோம். அதன் தரவுகளை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வந்துள்ளோம். எங்கள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. இங்கிலாந்து உள்பட 12 நாடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.

    இந்திய நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அது சரியல்ல’ என தெரிவித்தார்.

    இதனால், சீரம் மற்றும் பாரத் பயோடெக் இடையே கருத்து  மோதல் முற்றி வந்தது.

    இந்நிலையில், தங்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமும் கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்களுக்கும், நாட்டுக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் கொரோனா தடுப்பூசிகளை உலக அளவில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் நாங்கள் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளோம்’

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×