search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.டி.குமாரசாமி
    X
    எச்.டி.குமாரசாமி

    கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் மரணம் ஒரு ’அரசியல் கொலை’ - குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

    கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் மரணம் ஒரு ‘அரசியல் கொலை’ என்று முன்னாள் முதல்மந்திரி எச்.டி.குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
    ஐதராபாத்:
     
    கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக செயல்பட்டு வந்தவர் தர்மே கவுடா. இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்.

    இதற்கிடையில், கடந்த 15-ம் தேதி நடந்த கர்நாடகமேலவை சிறப்புக்கூட்டத்தொடரில் பசுவதை தடுப்பு சட்டதை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்ய முயற்சித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கையில் அமர மறுத்துவிட்டார்.

    இதனால், பாஜக-காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்மே கவுடாவை சபாநாயகர் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். கர்நாடக சட்டமேலவையில் நடந்த அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

    இது ஒருபுறமிருக்க, சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா கர்நாடகாவின் சிக்மகளூரு அருகே உள்ள கடூரில் ரெயில் தண்டாவாளத்தில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    தர்மே கவுடா சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை? செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக சட்டமேலவை துணைசபாநாயகர் தர்மே கவுடா ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.       

    இந்நிலையில், தர்மே கவுடாவின் மரணம் ஒரு ‘அரசியல் கொலை’ என்று கர்நாடக முன்னாள் முதல்மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக எச்.டி.குமாரசாமி கூறுகையில், ’இன்று நடைபெற்றது ஒரு அரசியல் கொலை. இந்த கொலைக்கு காரணம் யார் என்ற உண்மையை கூடிய விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுகளால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×