search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி லலித் விலகல்

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் விலகினார்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அம்மாநில அரசு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதற்கு எதிராக இரு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    வக்கீல் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவில், நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுக்களை விசாரித்து அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். பதவியை தவறாக பயன்படுத்தியதால், முதல் மந்திரி பதவியை வகிக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்க வேண்டும் என கோரினார்.

    மற்றொரு வக்கீல் சுனில்குமார் சிங் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகளுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதற்கு தடை விதிக்கவும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் கோரினார்.

    இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்த ஆந்திர முதல் மந்திரிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி யு.யு.லலித் விலகுவதாக தெரிவித்தார்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

    அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி தொடர்பான வழக்கில் தான் வாதாடி உள்ளதால் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி யு.யு.லலித் தெரிவித்தார். மேலும், தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து, இந்த மனுக்களை விரைவில் விசாரிக்கும் வகையில் பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×