search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் வீரமரணம்

    காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதும், அவர்களை தடுக்க நம் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் இந்திய எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் மசில் செக்டாரில் நள்ளிரவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை, சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். ஆனால் சரண் அடைய மறுத்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    உடனே ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டை விடியவிடிய நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும் இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரியும், 3 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஸ்ரீநகர் ராணுவ செய்தி தொடர்பாளர் ராஜேஷ் காலியா கூறுகையில், ‘பயங்கரவாதிகள் நடமாட்டத்தை அறிந்த வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். வீரர்களின் தாக்குதலால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 4 மணி வரை நடந்த இந்த சண்டையில் 4 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.’ என்று கூறினார்.
    Next Story
    ×