search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    எதிர்பார்த்ததை விட வேகமாக பொருளாதாரம் மீண்டு வருகிறது - பிரதமர் மோடி தகவல்

    இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாகவும், 2024-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியை எட்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. உற்பத்தி, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் முடங்கியதால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

    தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியிருந்தார்.

    இதைப்போல, பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாக பிரதமர் மோடியும் கூறியுள்ளார். இகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-

    நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி, நீண்டகாலமாக காத்திருந்த, யாரும் செயல்படுத்த முயற்சிக்காத பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்தவகையில் நிலக்கரி, விவசாயம், தொழிலாளர், பாதுகாப்பு, சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இது கொரோனா நெருக்கடிக்கு முன்பு இருந்த மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையை திரும்ப பெறுவதற்கு எங்களுக்கு உதவியது.

    கொரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் ஊரடங்கை அறிவித்தது மட்டுமின்றி, அவற்றின் மீதான தளர்வு நடவடிக்கைகளையும் நாங்கள் சரியான நேரத்தில் எடுத்திருக்கிறோம்.

    இதன்மூலம் நமது பொருளாதாரத்தின் பெரும்பகுதி மீண்டும் திரும்பி வருகிறது. அந்த வகையில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. ஆகஸ்டு-செப்டம்பர் மாத தரவுகள் அவற்றை உறுதி செய்துள்ளன.

    நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நமது தொற்றுநோய் பாதிப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. எனினும் நமது பொருளாதாரம் மீண்டும் முன்னேற்ற பாதைக்கு திரும்புவதை காட்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் நமது மக்களே காரணமாகும்.

    கடை உரிமையாளர், வர்த்தகர், சிறு-குறு-நடுத்தர தொழில் புரிவோர், தொழிற்சாலை தளத்தில் பணியாற்றுவோர், தொழில்முனைவோர் போன்ற இந்த ஹீரோக்கள் எல்லாம் வலுவான சந்தை உணர்வுக்கும், பொருளாதார மீட்சிக்கும் காரணமானவர்கள் ஆவர்.

    கொரோனா தொற்றுக்குப்பிறகுதான் உற்பத்தியை பற்றி இந்தியா பேச தொடங்கியது என்று இல்லை. அதற்கான பணிகள் ஏற்கனவே நடந்துதான் வருகிறது.

    எங்கள் முயற்சிகள், சில நாடுகளுக்கு மாற்றாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முயன்று வருகிறோம். அனைவரின் முன்னேற்றத்தையும் காண விரும்புகிறோம். இந்தியா வளர்ச்சியடைந்தால், உலகின் 6-ல் 1 பங்கு மனிதகுலம் வளர்ச்சியடையும்.

    இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு புதிய உலகம் கட்டமைக்கப்பட்டதுபோல, கொரோனாவுக்குப்பிறகும் அதுபோன்றதொரு சூழல் ஏற்படும். இந்தமுறை உற்பத்தி பஸ்சை இந்தியாதான் ஓட்டும். அத்துடன் உலகளாவிய வினியோக சங்கிலியையும் ஒருங்கிணைக்கும். ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தேவை ரீதியாக எங்களுக்கு என சிறப்பான முன்னுரிமைகள் உள்ளன.

    இலக்குகளை நிறைவேற்றுவதில் எங்கள் அரசுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தவகையில் கிராமப்புற சுகாதாரத்துக்கான இலக்கை, நிர்ணயித்த காலக்கெடுவுக்கு முன் முடித்தோம். அதைப்போல கிராமங்களுக்கு மின்சார வசதி, 8 கோடி உஜ்வாலா இணைப்புகள் போன்றவற்றையும் அந்தந்த காலக்கெடுவுக்குள் எட்டினோம்.

    எனவே, எங்கள் வரலாறு மற்றும் தொடர் சீர்திருத்தங்கள் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன், முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் விரைவில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, அதேநேரம் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

    வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனம் கூடாது எனவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×