search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நினைவு சின்னத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
    X
    போலீஸ் நினைவு சின்னத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    பயங்கரவாதம் தொடர்பான சவால்களை சமாளிக்க போலீஸ் படைகளை நவீனமயமாக்கி வருகிறோம் - அமித்ஷா பேச்சு

    பயங்கரவாதம் குறித்த சவால்களை சமாளிக்க போலீஸ் படைகளை நவீனமயமாக்கி வருகிறோம் என்று அமித்ஷா கூறினார்.
    புதுடெல்லி:

    காவலர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள போலீஸ் நினைவுச்சின்னத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    மத்திய ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படையினரிடையே அமித்ஷா பேசினார். அவர் பேசியதாவது:-

    போலீஸ் படைகளின் பணி, புதிய சவால்களை கண்டு வருகிறது. பயங்கரவாதம், இணைய குற்றங்கள், போதை கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், கள்ள நோட்டு போன்ற குற்றங்களில், கடந்த 20, 30 ஆண்டுகளில் புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்த புதிய பரிமாணங்களை சமாளிக்க போலீஸ் படைகளை தயார்படுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்காக போலீஸ் துறையை நவீனமயமாக்கும் விரிவான திட்டத்தை தயாரித்துள்ளோம்.

    இனிவரும் நாட்களில், மேலே சொன்ன சவால்களை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் படைகளை மோடி அரசு தயார்படுத்தும் என்று நம்புகிறேன்.

    அத்துடன், நாட்டின் எல்லையை பலப்படுத்த தொழில்நுட்பங்களை புகுத்தி இருக்கிறோம். தொழில்நுட்பமும், படைகளின் செயல்திறனும் நமது எல்லைகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

    இதுவரை, 35 ஆயிரத்து 398 போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 264 பேர் இறந்தனர். கொரோனாவுக்கு 343 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.
    Next Story
    ×