search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை கங்கனா ரணாவத்
    X
    நடிகை கங்கனா ரணாவத்

    நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    துமகூரு :

    மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தம் உள்ளிட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்” என்று கூறி இருந்தார். நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் துமகூரு மாவட்டம் கியாத்தசந்திரா பகுதியை சேர்ந்த வக்கீலான ரமேஷ் நாயக் என்பவர், விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துமகூரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த புகார் மனுவின்பேரில் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்யக்கூறி கியாத்தசந்திரா போலீசாருக்கு துமகூரு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கியாத்தசந்திரா போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய கங்கனா ரணாவத், இந்த விஷயத்தில் மராட்டிய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே மும்பையில் உள்ள கங்கனா ரணாவத்தின் பங்களாவை சட்டவிரோதமாக கட்டியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதையடுத்து அவர் மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான மணாலிக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×