search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி
    X
    மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி

    கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி- டெல்லியில் இன்று இறுதிச்சடங்கு

    கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடியின் இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி (வயது 65), சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி ஆவார்.
     
    சுரேஷ் அங்காடி கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    டெல்லியில் இருந்து சுரேஷ் அங்காடியின் உடலை சொந்த ஊரான பெலகாவிக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் நடத்த அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதுபற்றி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விரைவில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எனவே, டெல்லியில் வைத்து இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, லோதி சாலை சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சுரேஷ் அங்காடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×