search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஏழைகள் மீதான தாக்குதல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஏழைகள் மீதான தாக்குதல் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொருளாதாரம் குறித்த தனது 2-வது வீடியோவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    அமைப்புசாரா துறை என்பது ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெட்டி கடைக்காரர்கள் ஆகியோர் அடங்கியது ஆகும். அவர்கள் அனைவரும் ரொக்க பயன்பாட்டை நம்பியே வாழ்கிறார்கள்.

    ஆனால், பிரதமர் மோடி ரொக்கமில்லா இந்தியாவை படைக்க விரும்புகிறார். அதனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்த நடவடிக்கை, ரொக்கத்தை சார்ந்தே செயல்படும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெட்டி கடைக்காரர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்.

    இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்பு பணத்தையும் ஒழிக்கவில்லை, ஏழைகளுக்கும் பலன் அளிக்கவில்லை. பிறகு யார்தான் பலன் அடைந்தனர்? பெரும் கோடீசுவரர்கள்தான் பலன் அடைந்தனர்.

    உங்களது சட்டை பையிலும், வீட்டிலும் இருந்த பணத்தை மத்திய அரசு வாங்கிக்கொண்டு, மேற்கண்ட கோடீசுவரர்களின் கடனை ரத்து செய்ய பயன்படுத்தியது. இது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு இலக்குதான்.

    இரண்டாவது இலக்கு, அமைப்புசாரா துறை உள்பட நாடு முழுவதும் ரொக்கத்தை ஒழிப்பது ஆகும். பிரதமரே கூறியதுபோல், ரொக்கமில்லா இந்தியா உருவாக்கப்பட்டால், ஏழைகள் அடங்கிய அமைப்புசாரா துறை அழிக்கப்படும்.

    ரொக்கத்தை நம்பி செயல்படும் அமைப்புசாரா துறையினர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாடே ஒன்றுபட்டு எதிர்த்து போராட வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    Next Story
    ×