search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
    X
    இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

    சீன படைகள் அத்துமீறியதால் பதற்றம்... லடாக்கில் இந்திய ராணுவ தளபதி நரவானே ஆய்வு

    சீன படைகள் அத்துமீறியதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் உருவான நிலையில், இந்திய ராணுவ தளபதி நரவானே இன்று லே பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
    புதுடெல்லி:

    இந்திய மற்றும் சீன படைகள் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியை பராமரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது.

    தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாடுகளை மீறி கிழக்கு லடாக் அருகே சீன ராணுவம் கடந்த 29ம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஏற்கனவே பாங்காங் சோ ஏரியின் வட கரையில் பிரச்சினை உள்ள நிலையில், தென் கரையிலும் சீனா பிரச்சனை செய்ததால் பதற்றம் உருவாகியிருக்கிறது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று லடாக்கின் லே பகுதிக்கு சென்றார். 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள நரவானே, எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார். ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) முழுவதும் உள்ள கள நிலவரம் குறித்து ராணுவ தளபதிக்கு மூத்த படைத்தளபதிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    மேலும் மூன்று மாதங்களுக்கும் மேலாக சீன துருப்புக்களை எதிர்கொள்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் படையினரின் தயார் நிலையையும் ராணுவத் தளபதி நரவானே ஆய்வு செய்யவிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×