search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஐ.டி.
    X
    ஐ.ஐ.டி.

    நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க தேவையில்லை - டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனர் கருத்து

    நீட், ஜே.இ.இ. தேர்வுகளை மேலும் தள்ளிவைப்பது, நன்றாக படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனர் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகள், செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை நடக்கின்றன. மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு, செப்டம்பர் 13-ந்தேதி நடக்கிறது.

    நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்துக்கு மேல் வருவதால், இந்த தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனர் ராம்கோபால் ராவ் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    நீட், ஜே.இ.இ. தேர்வுகளை மேலும் தாமதப்படுத்துவது, கல்வி ஆண்டுக்கு மட்டுமின்றி நன்றாக படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே, இந்த கல்வி ஆண்டில் 6 மாதங்கள் வீணாகி விட்டது. இன்னும் தாமதப்படுத்தினால், இந்த கல்வி ஆண்டே போய்விடும்.

    இந்த தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தினால்தான், குறைந்தபட்சம் டிசம்பர் மாதமாவது ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்க முடியும்.

    கொரோனா இன்னும் 6 மாதங்கள் முதல் ஓராண்டுவரை இருக்கும். இந்த புதிய நிலைமையுடன் பழகிக்கொள்ள வேண்டும். இதை விரைவிலேயே உணர்ந்து கொள்வது நம் எல்லோருக்கும் நல்லது. எனவே, மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுத வேண்டும்.

    கடந்த தடவை இந்த தேர்வுகளை தள்ளி வைத்ததால், தேர்வுக்கு நன்றாக தயாராக முடிந்தது. நன்றாக படித்து தயாராகி உள்ள மாணவர்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.

    அவர்களிடம் இருந்து எனக்கு ஏராளமான இ-மெயில்கள் வந்துள்ளன. கொரோனா போதாது என்று தேர்வு தேதி குறித்த நிச்சயமற்ற தன்மையும் அவர்களது மனஅழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

    தனிப்பட்ட முறையில், போதிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுவதையே நான் ஆதரிக்கிறேன். கொரோனாவுக்கு ஊரடங்கு ஒரு தீர்வே அல்ல. எப்போதும் நாம் ஊரடங்கு சூழ்நிலையிலேயே இருக்க முடியாது.

    இப்போதெல்லாம் ஜே.இ.இ. தேர்வு, ஆண்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை நடத்தப்படுகிறது. எனவே, இந்த தடவை எழுத முடியாதவர்கள், 6 மாதம் கழித்துக்கூட எழுதிக்கொள்ளலாம். எனவே, கவலைப்பட எதுவும் இல்லை. தேர்வுகளையும் தள்ளிவைக்க தேவையில்லை.

    ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகளை நடத்த உரிய நடவடிக்கை எடுப்போம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×