search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மருத்துவ துறையை துரத்தும் கொரோனா - நாடு முழுவதும் 196 டாக்டர்கள் பலி

    கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 196 டாக்டர்கள் பலியான நிலையில், மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலில் பிரதமர் மோடி கவனம் செலுத்த மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் சுமார் 196 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக தொற்றுக்கு ஆளாவதுடன், ஆயிரக்கணக்கில் பலியும் நிகழ்ந்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று போராடும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை சேர்ந்த ஏராளமானோரும் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் கணிசமான உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது.

    அந்த வகையில் நாடு முழுவதும் 196 டாக்டர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ராஜன் சர்மா, செயலாளர் அசோகன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த 3.5 லட்சத்துக்கும் அதிகமான டாக்டர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இவர்களால் மக்களின் அருகாமையிலேயே மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. தற்போது எழுந்துள்ள கொரோனா அச்சுறுத்தல் அரசு மற்றும் தனியார் என எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து துறையையும் பாதிக்கிறது. இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.

    இந்திய மருத்துவ சங்கம் கடைசியாக சேகரித்த தகவல்படி, 196 டாக்டர்களை இந்த கொரோனாவால் நாடு இழந்து இருக்கிறது. இதில் 170 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் இறந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பொது மருத்துவர்கள் ஆவர். கொரோனாவுக்கு ஏதிரான போராட்டத்தில் டாக்டர்கள் இவ்வாறு உயிர் துறப்பது பெரும் கவலையை அளிக்கிறது.

    கொரோனாவால் பலியாகும் டாக்டர்களின் எண்ணிக்கை ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை என்றும், பல பகுதிகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் வரும் தகவல்கள் மேலும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.

    எனவே இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் டாக்டர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆபத்தான சூழலில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசின் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு பலன்களை அனைத்து துறை டாக்டர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். ஒரு டாக்டரின் உயிரை பாதுகாப்பதால், அவரை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எனவே எங்கள் மருத்துவ சமூகத்துக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் இந்த விளைவு குறித்து இந்திய மருத்துவ சங்கம் உங்களின் (பிரதமர்) கவனத்தை வேண்டுகிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×