search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு

    சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழகஅரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, நிலம் கையகப்படுத்தி இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மத்திய அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், ‘மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடிப்படையில் வெளியிட்ட அரசாணையின் படி சேலம்-சென்னை பசுமை சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    அப்படி கையகப்படுத்தும் நிலத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக செப்பனிட்டு சாலை பணிகளை தொடங்கும் முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றால் போதும். எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு இந்த கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×