search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி ராமர் கோவில் - பாதுகாப்பு பணி
    X
    அயோத்தி ராமர் கோவில் - பாதுகாப்பு பணி

    ராமர் கோவில் பூமி பூஜையால் அயோத்தியில் விழாக்கோலம் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

    ராமர் கோவில் பூமி பூஜையையொட்டி, அயோத்தி விழாக்கோலம் பூண்டு உள்ளது.. பிரதமர் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    அயோத்தி:

    அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இதுகுறித்து அயோத்தி மாவட்ட கலெக்டர் அனுஜ்குமார் ஜா கூறியதாவது:-

    ராமாயணத்தை சித்தரிக்கும் சுவர் ஓவியங்கள், அயோத்தி நகரை அலங்கரித்து வருகின்றன. பூமி பூஜை கொண்டாட்டங்கள், ஆகஸ்டு 3-ந் தேதியே தொடங்குகின்றன. அன்றைய தினம், அயோத்தியில் உள்ள அனைத்து ஆலயங்களும், படித்துறைகளும், மடங்களும் வண்ண விளக்கொளியில் ஜொலிக்கத் தொடங்கும். ஆன்மிக பாடல்கள் தொடர்ந்து ஒலித்தபடியே இருக்கும்.

    அயோத்தி ராமர் கோவில்


    ஆகஸ்டு 5-ந் தேதி, மறக்க முடியாத நாளாக இருக்கும். அதே சமயத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அதிகமானோர் கூடுவதற்கான கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படும்.

    பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி வைப்பதுடன், அயோத்தி நகருக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அயோத்தி நகரை உலகிலேயே அதிநவீன நகராகவும், ஆன்மிக நகராகவும் மேம்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் முடிவடைந்த திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பதுடன், பிற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

    இவற்றில், சரயு ஆற்றங்கரையில் 600 ஏக்கர் பரப்பளவில் புதிய ஹைடெக் நகரம் உருவாக்கப்படும். அங்கு 251 மீட்டர் உயர ராமர் சிலை நிறுவப்படும்.

    அயோத்தியில், ஸ்ரீராமச்சந்திரா சர்வதேச விமான நிலையம், அயோத்தியில் இருந்து கொல்கத்தாவுக்கு நீர்வழி பயண போக்குவரத்து, சாலைகள் ஆகியவையும் இந்த திட்டங்களில் அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அயோத்தியிலும், அதை சுற்றிலும் மொத்தம் 3 ஆயிரம் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட உள்ளன. அவற்றில், நாள் முழுவதும் ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடியே இருக்கும். மேலும், பிரதமரின் உரையும், பூமி பூஜை மத சடங்குகளும் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும்.

    பூமி பூஜையில் பயன்படுத்துவதற்காக, நாடு முழுவதும் பல்வேறு ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரும், ஆன்மிக தலங்களில் எடுக்கப்பட்ட மண்ணும் அயோத்திக்கு வந்துள்ளன.

    அத்துடன், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மண் விளக்குகளும், தாமிர விளக்குகளும் வந்துள்ளன. அவை அனைத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு லட்சம் விளக்குகள் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூமி பூஜையில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பிரயாக்ராஜ் கும்பமேளா போல், இந்த பூமி பூஜையை பிரமாண்டமாக நடத்த உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்பதால், அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியை சுற்றியுள்ள 9 மாவட்டங்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

    சந்தேகத்துக்குரிய நபர்கள், அயோத்திக்குள் நுழைய முயற்சிப்பதை அந்த உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பிரதமரின் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் கருப்பு பூனைப்படையினர் பூமி பூஜை நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளும், உளவு அமைப்புகளின் உயர் அதிகாரிகளும், மத்திய படைகளின் உயர் அதிகாரிகளும் அயோத்தியில் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பூமி பூஜையின்போது பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள், குறிப்பிடத்தக்க எந்த தகவலையும் அளிக்கவில்லை என்று மாநில கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் மறுத்துள்ளார். இருப்பினும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினத்தில் பூமி பூஜை நடப்பதால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, 9 மூத்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் பூமி பூஜை நடைபெறும் நாள் அன்று, அரசியல் சாசனம் 370 - வது பிரிவு நீக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் வருவதாலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையும் ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×