search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவை தடுக்க நடவடிக்கை
    X
    கொரோனாவை தடுக்க நடவடிக்கை

    பெங்களூருவுக்கு சென்று வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்: மண்டியா அருகே கிராமங்களில் நூதன அறிவிப்பு

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவுக்கு சென்று வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மண்டியா அருகே உள்ள கிராமங்களில் நூதன அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 15 நாட்களாக அதிகரித்து வருகிறது. அதாவது கொரோனா பாதிப்பும், இந்த நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கையும் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இதனால் பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வருகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல் பச்சிளம் குழந்தை முதல் முதியவர்கள் வரையும், ஏழை எளியவர்கள் முதல் செல்வந்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது.

    சென்னை, மும்பை, டெல்லி போல் பெங்களூருவில் கொரோனா தனது கால்களை அகல ஊன்றி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெங்களூருவில் வசித்து வந்த வெளிமாவட்ட மக்கள், உயிருக்கு பயந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். அத்துடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருவோரை, உள்ளூர் மக்கள் கொரோனா பீதியில் விரோதிகள் போல் பாவிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா அதிகரித்து வருவதால், பெங்களூருவில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக சாம்ராஜ்நகர், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், அவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் பெங்களூருவில் இருந்து மூட்டை, முடிச்சுகள், பெட்டி, படுக்கைகளுடன் சென்றவர்கள் சொந்த ஊரில் தங்க முடியாமலும், பெங்களூருவுக்கு திரும்பி செல்ல முடியாமலும் நடுரோட்டில் சிக்கி தவிக்கிறார்கள்.

    இதற்கிடையே மண்டியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூருவில் இருந்து யாராவது கிராமங்களுக்கு வந்தால் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதுபோல் கிராமங்களை சேர்ந்த மக்கள் யாராவது பெங்களூருவுக்கு சென்று வந்தாலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு தண்டோரா மூலம் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அறிவித்து வருகிறார்கள்.

    தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×