search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம்
    X
    பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம்

    கொரோனா பாதித்து உயிரிழந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம்

    பல்லாரியை தொடர்ந்து தாவணகெரேயிலும், கொரோனா பாதித்து உயிரிழந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம் செய்த மனிதநேயமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    தாவணகெரே:

    கொரோனா வைரஸ் பல உயிர்களை பலிவாங்கி வருவதுடன், மனிதநேயமற்ற சம்பவங்கள் நிகழவும் அடிகோலிட்டு வருகிறது வேதனையான விஷயம். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவ்வாறு இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் அரசின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்து வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை மனிதநேயமற்ற முறையில் தரதரவென இழுத்து சென்று தூக்கி வீசி அடக்கம் செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் பல்லாரியில் நேற்று முன்தினம் அரங்கேறியது.

    அதாவது கொரோனா பாதித்தவர்களின் உடல்களை சுகாதார ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வந்து தரதரவென இழுத்து சென்று அடக்கம் செய்த சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதற வைத்தன. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மனிதநேய முறையில் சுகாதாரத் துறையினர் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பல்லாரி நிகழ்வு மறைவதற்குள் தாவணகெரேயிலும் கொரோனாவுக்கு பலியான ஒருவரின் உடல் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம் செய்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவை சேர்ந்தவர், 56 வயது பெண். இவருக்கு கடந்த மே மாதம் 17-ந்தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது சளி, ரத்தம் மாதிரி சேகரித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவரை கொரோனா தடுப்பு வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் சன்னகிரியில் உள்ள வீரசைவ மயானத்தில் நடந்தது. அப்போது அவரது உடல் ஆம்புலன்சில் இருந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் இறக்கப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடல் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி குழிக்குள் வீசப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    இதுபற்றிய வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் மகாந்தேஷ் பெலகி கூறுகையில், தாவணகெரே மாவட்டத்தில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை அரசு வழிகாட்டுதல் படி அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தான் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் அடக்கம் செய்து வரப்படுகிறது. அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பல்லாரியை தொடர்ந்து தாவணகெரே மாவட்டத்திலும் கொரோனாவுக்கு இறந்தவரின் உடலை மனிதநேயமற்ற முறையில் அடக்கம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×