search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டேடியத்திற்குள் போடப்பட்டுள்ள படுக்கைகள்
    X
    ஸ்டேடியத்திற்குள் போடப்பட்டுள்ள படுக்கைகள்

    டெல்லியில் கொரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாறிய காமன்வெல்த் ஸ்டேடியம்

    டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் கொரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து டெல்லி மூன்றாமிடத்தில் உள்ளது. இதுவரை 89802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2803 பேர் மரணம் அடைந்துள்ளனர். 27007 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், படுக்கைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காமன்வெல்த் உள்விளையாட்டு அரங்கம், 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த சிறப்பு மையம் சில தினங்களில் செயல்பாட்டிற்கு வரும் என்றும், தங்குமிடம் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதற்கான வசதிகளை செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

    மொத்தம் 80 டாக்டர்கள், 150 செவிலியர்கள் இந்த மையத்தில் பணியில் இருப்பார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாரும் இந்த மையத்திற்கு அழைத்து வரப்பட மாட்டார்கள். மருத்துவமனையில் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். எனினும், இந்த மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆக்சிஜன் வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    இதேபோல் 40 ஓட்டல்களையும், 80 திருமண மண்டபங்களையும் கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.
    Next Story
    ×