search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாராவி குடிசைப்பகுதி
    X
    மும்பை தாராவி குடிசைப்பகுதி

    புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று - கூட்டு முயற்சியால் வென்ற தாராவி

    கொரோனாவை கூட்டு முயற்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதுதான் தாராவி, தமிழ்நாட்டுக்கு உணர்த்தும் பாடம்.
    மும்பை:

    மும்பையில் தாராவி தனித்தீவாய்த்தான் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்பு மும்பைக்கு உண்டென்றால், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைகளின் தொகுப்பு என்ற பெருமை தாராவிக்கு இருக்கிறது.

    அதுவும் வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பதுவும்  தாராவியின் அதிசயம்தான். தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்ற தமிழர்களுக்கு இரண்டாவது தாய்வீடு என்றால் அது தாராவிதான்.  பத்துக்கு பத்து என்று வேடிக்கையாக சொல்கிற அளவில் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் சர்வ சாதாரணமாக 10 பேர் வாழ்வது இந்தியாவிலேயே தாராவியில் மட்டும்தான்.

    சின்னச்சின்ன சந்துகள் ஏராளம். அவற்றில் வசித்துக்கொண்டு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

    அந்த தாராவியின் பாலிகா நகரில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏப்ரல் 1-ந் தேதி பாதித்தபோது, மும்பை அதிர்ந்துதான் போனது. தாராவியில் ஒருவருக்கு தொற்று என்றால் அது என்ன வேகத்தில் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து உண்டு என்று உணர்ந்தவர்கள் அச்சப்பட்டார்கள்.

    வீட்டுக்கு ஒரு கழிவறை போதாது என்றுதான் குறைந்தபட்சம் நமது வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு, மூன்று கழிவறைகள் இருக்கின்றன. ஆனால் தாராவியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஏறத்தாழ 450 முதல் 500 கழிவறைகள்தான். ஒரு கழிவறையை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகிறபோது, இந்த கொரோனா அதிவிரைவில் பெரும்பாலோருக்கு பரவிவிடும் அச்சம் உருவானது.

    தாராவியில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

    நேற்று வரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,262 ஆக இருந்தது.

    இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2, 268 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை தாராவியில் கொரோனாவால் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.  1598 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 
    Next Story
    ×