search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது 73 சதவீதம் பேர் நம்பிக்கை - சர்வேயில் தகவல்

    சீன எல்லை மோதலில் தக்க பதிலடி கொடுத்ததன் மூலம் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது 73 சதவீதம் பேர் நம்பிக்கை வைத்துள்ளதாக சி-வோட்டர் சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சமீபத்தில் சீன எல்லையில் நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதுதொடர்பாக சி-வோட்டர் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் சர்வே மேற்கொண்டது. அந்த சர்வேயின் போது பொதுமக்களிடம் சீன விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்த சர்வே முடிவில், பாகிஸ்தானை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு சீனா பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாக 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 39 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உயிரைக் கொன்ற கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு சீனாவுக்கு கடுமையான பதிலடியை இந்தியா அளித்துள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 60 சதவீதம் பேர் நமது வீரர்களை பழிவாங்கிய சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கவில்லை என கருதுவதாக கூறி உள்ளனர்.

    எதிர்க்கட்சிகளை விட பிரதமர் மோடி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக 73.6 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

    16.7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர். 9.6 சதவீதம் பேர் சீனாவுடன் நடந்து வரும் மோதலை எதிர்க்கட்சியோ, ஆளும் பா.ஜ.க. அரசாங்கமோ முறையாக கையாளவில்லை என்று கருதுவதாக கூறி உள்ளனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தியை ஒப்பிட்டு கேள்வி எழுப்பியபோது பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீது அதிக விருப்பம் தெரிவிப்பதாக கூறி உள்ளனர். 61 சதவீதம் பேர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என்று தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். தனது ராஜதந்திரம் தோல்வி அடைந்ததால் பா.ஜ.க. அரசை தாக்கி எல்லை பிரச்சினையை திசை திருப்பும் வகையில் மாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

    தேசிய பாதுகாப்பை பொறுத்தமட்டில் 72.6 சதவீதம் பேர் மோடியை நம்புவதாக தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி மீது நம்பிக்கை இருப்பதாக 14.4 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    சீனாவின் நடவடிக்கையால் இந்திய மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிப்பார்கள் என நம்புவதாக 68 சதவீத பேரும், சீன பொருட்களை இந்திய மக்கள் தொடர்ந்து வாங்குவர் என கருதுவதாக 31 சதவீதம் பேரும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×