search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு தழுவிய ஊரடங்கு
    X
    நாடு தழுவிய ஊரடங்கு

    கொரோனாவை கட்டுப்படுத்த இனி நாடு தழுவிய ஊரடங்கு உதவாது - வைரஸ் வல்லுனர்

    கொரோனாவை கட்டுப்படுத்த இனி நாடு தழுவிய ஊரடங்கு உதவாது என்று பிரபல வைரஸ் வல்லுனர் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அல்லாடி வருகிறது. இந்த நோய்த்தொற்றின் பரவலைத்தடுக்க உலக அளவில் கை கொடுக்கும் முதல் வழி ஊரடங்குதான் என கூறப்பட்டு வருகிறது.

    இதனால்தான் உலக நாடுகள் பலவும் மாதக்கணக்கில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

    இந்தியாவிலும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும்கூட இந்தியாவில் 1¼ லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது. 3,700 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவு


    இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது பெற்றவரும் புகழ்பெற்ற வைரஸ் வல்லுனருமான சாகித் ஜமீல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நமது நாட்டில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான பரிசோதனை மிக குறைவாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் மிகக்குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    கொரோனா பரிசோதனை


    தற்போது நமது நாட்டில் 10 லட்சம் பேரில் 1,744 மாதிரிகள்தான் பரிசோதிக்கப்படுகின்றன. நாம் ஆன்டிபாடி சோதனைகளையும் (நோய் எதிர்ப்பு பொருள் கண்டறியும் சோதனை), கொரோனாவை உறுதி செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகளையும் பயன்படுத்த வேண்டும். இது நடப்பு தொற்றையும், கடந்த கால தொற்றையும் நமக்கு அடையாளம் காட்டும். இது படிப்படியாக தரவுகளை வழங்கும். இதற்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளை நாம் தொடங்க வேண்டும்.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே நீண்ட காலத்துக்கு முன்பாகவே சமூக பரவல் வந்து விட்டது. சுகாதார அதிகாரிகள் இதை ஒப்புக்கொள்வதில்லை.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ‘சரி’ ஆய்வில் கூட (கடுமையான சுவாச நோய் ஆய்வு), கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 40 சதவீதம் பேருக்கு வெளிநாட்டு பயண வரலாறு அல்லது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இது சமூக பரவல் இல்லை என்றால் எதுதான் சமூக பரவல்?

    கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு என்பது நமது நேரத்தை வாங்கி உள்ளது. ஆனால் அதைத் தொடர்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. அதற்கு பதிலாக சமூகத்தினரால் இயக்கப்படுகிற உள்ளூர் ஊரடங்குகள், தனிமைப்படுத்துதல்கள் மிக முக்கியம். அதுதான் செயலுக்கு வரவேண்டும். சட்ட விதிகளைப் பின்பற்றுவதோடு நம்பிக்கையை வளர்ப்பது மிக முக்கியமானது. ஒரு பொது சுகாதார பிரச்சினையை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது.

    கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கட்டுப்படுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தி 2 வழிகளில் பெறப்படுகிறது. அது, மக்கள் தொகையில் போதுமான ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டு மீட்கப்படுகிறபோதும், தடுப்பூசி செலுத்துதலின் மூலமும் கிடைக்கிறது.

    கொரோனா தொற்று - சமூக பரவல்  கோப்புப்படம்


    கொரோனா வைரசை பொறுத்தமட்டில் மக்கள் தொகையில் குறைந்தது 60 சதவீதம்பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி மீட்கப்பட வேண்டும் அல்லது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் இது நடக்கும்.

    மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், ஒரு தொற்று நோயில் இருந்து எதிர்ப்புச்சக்தியாக மாறும்போது, மொத்தமாக நோய் எதிர்ப்புச்சக்தியை அடைய முடியும். ஏனென்றால் அவர்கள் தொற்றுக்கு ஆளாகி மீட்கப்படுகிறார்கள் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. இது நடக்கிறபோது, நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்களுக்கு இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால் தொற்றினை சுமந்து கொண்டு செல்வோர் இல்லாமல் போய்விடுகிறார்கள்.

    இந்தியாவில் 138 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஒரு சதுர கி.மீ. பரப்பில் 400 பேர் வாழ்கிறார்கள். ஆனால் சுகாதாரத்தில் நாம் உலகில் 143-வது இடத்தில் இருக்கிறோம்.

    நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் 60 சதவீத மக்கள் விரைவாக தொற்று ஏற்பட நாம் அனுமதித்தால், நம் மக்கள் தொகையில் 83 கோடிப்பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும்.

    15 சதவீதம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கிற நிலை என்றால் 12½ கோடி தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தேவைப்படுகிறது.

    5 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன், சுவாச கருவி தேவை என்றால் அத்தகைய வசதி கொண்ட 4 கோடியே 20 லட்சம் படுக்கைகள் தேவை.

    மக்கள் தொகையில் இறப்புவீதம் 0.5 சதவீதமாக இருந்தால் அது 40 லட்சம் பேரின் இறப்பை குறிக்கும். நாம் இந்த விலையை கொடுக்க தயாராக இருந்தால், மொத்தமாக நோய் எதிர்ப்புச்சக்தியை குறுகிய காலத்தில் பெற முடியும். நாம் அதற்கு தயாராக இல்லை.

    இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி வந்த விடுவதற்கான வாய்ப்பு இல்லை.

    இருப்பினும், இது எவ்வளவு காலம் பாதுகாப்பை கொடுக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. வாரங்களுக்கா, மாதங்களுக்கா, வருடங்களுக்கா?

    அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, நாம் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன் இருந்த நிலைக்கு திரும்புவது சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன்.

    கொரோனா வைரஸ் நமது வாழ்க்கை முறையை சீர்திருத்துவதற்கு சரியான நேரத்தில் வந்துள்ள எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கொரோனா வைரஸ் இரண்டாவது அல்லது மூன்றாவது அலைகளுக்கு திரும்புமா என்பதை கணிப்பது கடினம். இந்த நோய்த் தொற்றை புரிந்துகொள்வதில் நாம் தளர்வாக இருக்கிறபோது, பிற்கால அலைகள் வரலாம்.

    ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுடன் கொரோனா வைரஸ் தொற்றை ஒப்பிடவே முடியாது. அது 1918-ம் ஆண்டு வந்தது. 1931-ம் ஆண்டின் நடுப்பகுதி வரை யாரும் அந்த வைரசை பார்த்தது இல்லை. அதைக் காண்பதற்கு உதவும் எலெக்டிரான் மைக்ராஸ்கோப், 1931-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    நோய்க்கிருமி, அதன் மரபணு ஒப்பனை, அது எவ்வாறு பரவுகிறது, அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி இன்று நாம் அதிகமாக அறிந்திருக்கிறோம். நாம் விவேகமானவர்களாக இருக்க வேண்டும். வல்லுனர்களின் ஆலோசனையையும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×