search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    ரூ.9 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்

    விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டை அனுமதிக்க இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டதால், அவர் விரைவில் நாடு கடத்தப்படுகிறார்.
    புதுடெல்லி :

    பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனங்களின் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டு, மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகியவை வழக்குப்பதிவு செய்துள்ளன.

    அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு எதிரான அவரது மேல்முறையீட்டு வழக்கை லண்டன் ஐகோர்ட்டு கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஆனால், இந்த மனுவை நேற்று இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால், விஜய் மல்லையாவுக்கு இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோனது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகன்று விட்டன.

    அவர் 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் படுவார். இருப்பினும், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அந்த நாட்டு உள்துறை மந்திரி பிரீத்தி படேல், முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான், விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியும்.

    முன்னதாக, கடனை முழுமையாக திருப்பி கொடுத்து விடுவதாகவும், தன் மீதான வழக்கை முடித்துக் கொள்ளுமாறும் மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருந்ததாவது:-

    கொரோனா பாதிப்புக்கிடையே மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவித்ததற்கு எனது பாராட்டுகள்.

    மத்திய அரசு நினைத்தால், விருப்பப்பட்ட அளவுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம். ஆனால், என்னை போன்ற சிறிய பங்களிப்பாளர்கள், கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்த முன்வந்தாலும், அதை புறக்கணிப்பது ஏன்?

    தயவுசெய்து எனது விருப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பணத்தை பெற்றுக்கொண்டு, என் மீதான வழக்கை முடித்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×