search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா அலுவலகம்
    X
    ஏர் இந்தியா அலுவலகம்

    ஏர் இந்தியா ஊழியருக்கு கொரோனா- டெல்லி தலைமை அலுவலகம் மூடப்பட்டது

    டெல்லியில் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடப்பட்டது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் மொத்தம் 7639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள். ஏர் இந்தியா தனது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்வதற்காக அலுவலகம் மூடப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியருக்கு அனைத்து உதவியும் வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்களை இயக்குவதற்கு முன்னதாக, ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு சோதனைக் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் மறு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. எனினும் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதேபோல் டெக்னீசியன் மற்றும் டிரைவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வெளியானது. ஆனால், அவர்களுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

    Next Story
    ×