search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிஜித் பானர்ஜி
    X
    அபிஜித் பானர்ஜி

    ஏழைகளுக்கு நேரடியாக பணப்பயன் சென்றடையவேண்டும்- அபிஜித் பானர்ஜி

    பொருளாதார தாக்கம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் கலந்துரையாடிய அபிஜித் பானர்ஜி, தற்போதுள்ள நெருக்கடியான தருணத்தில் ஏழைகளுக்கு நேரடி பண பரிமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 3900 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் மரணம் அடைந்துள்ளது. இதுவரை 1568 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரமும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார். அப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்றடைய வேண்டும் என அபிஜித் பானர்ஜி, ராகுல் காந்தியிடம் கூறினார். 

    ராகுல் காந்தி- அபிஜித் பானர்ஜி

    கலந்துரையாடலின்போது அபிஜித் பானர்ஜி மேலும் பேசியதாவது:-

    ஆதார் அடிப்படையில் பொது விநியோக திட்டத்தை (பி.டி.எஸ்) செயல்படுத்தியிருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும். 
    ஏழைகளின் துயரங்களையும் தணித்திருக்கும். பொது விநியோக திட்டத்தில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உணவு தேவைப்படுபவர்களுக்கு தற்காலிக ரேஷன் கார்டுகளை வழங்கலாம். 

    தற்போதுள்ள நெருக்கடியான தருணத்தில் ஏழைகளுக்கு நேரடி பண பரிமாற்றத்தை உறுதி செய்வது முக்கியமானது. இதற்காக நம்பகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்துக்கொள்ளலாம். தற்போது அமெரிக்க அரசு செய்து வருவதைப் போல, இந்தியாவில் மக்களின் கைகளில் பணம் சென்றடைய செய்ய வேண்டும். 

    அமெரிக்க அரசாங்கம் கொரோனா நிவாரணமாக நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தை ஒதுக்கி உள்ளது. எனவே, இந்தியாவும் போதுமான அளவு ஊக்க நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தாலும், ஊரடங்கில் இருந்து வேகமாக வெளியேற வேண்டியதும் அவசியம். ஊரடங்கை விலக்கிக் கொள்ள முடிவு எடுப்பதற்கு முன்பு நோயின் பாதை குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 

    மும்பை போன்ற ஒரு நகரங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையை மாநில அரசுகளே கையாள வேண்டும். 

    ஊரடங்கு காலத்திற்கு பிறகு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நம்பிக்கையுடன் முயற்சிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×