search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளாக மாறும் தனியார் நட்சத்திர ஓட்டல்கள்

    ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓட்டல்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றி இருக்கிறார்கள்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் நோய் பரவுதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பரவுதல் வேகம் மேலும் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திலுமே ஆயிரக்கணக்கானோரை கொரோனா தாக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

    எனவே அதற்கு சிகிச்சை அளிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பல ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் போதாது. எனவே தனியார் ஆஸ்பத்திரிகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமல்ல விளையாட்டு மைதானங்கள், சமூக கூடங்கள், கல்லூரி கட்டிடங்கள் போன்றவையும் ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஓட்டல்களை அரசு தன் வசப்படுத்தி ஆஸ்பத்திரிகளாக மாற்றி வருகிறது.

    1897-ல் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் இதேபோல ‘கொள்ளை நோய்’ பரவிய போது ஓட்டல்கள், தனியார் கட்டிடங்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றிக் கொள்ள சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இன்னும் நீடித்து வருகிறது. அந்த சட்டப்படி மாநில அரசுகள் தனியார் ஓட்டல்களை தன்வசப்படுத்தி அரசு ஆஸ்பத்திரிகளாக மாற்றி வருகின்றன.

    இவ்வாறு தற்போது ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஓட்டல்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றி இருக்கிறார்கள்.

    பல நட்சத்திர ஓட்டல்களும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் 28 ஓட்டல்களை இவ்வாறு மாற்றி இருக்கிறார்கள். மேலும் ரிசார்ட்டுகள், திருமண மண்டபங்கள் ஆகியவையும் ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ளன.

    மத்தியபிரதேசத்தில் இந்தூர், உஜ்ஜைனி ஆகிய இடங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது மாநிலத்தில் 70 சதவீத கொரோனா நோயாளிகள் இந்த இரு நகரங்களிலும் உள்ளனர்.

    அந்த இரு நகரங்களுமே முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். அங்குள்ள பல நட்சத்திர ஓட்டல்கள் ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தூரில் மட்டும் 22 ஓட்டல்கள் ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. அங்கு 1200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இதேபோல பல கட்டிடங்களை அரசு தன்வசப்படுத்தி ஆஸ்பத்திரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. மாநில தலைநகரம் போபாலில் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் 2 ஆயிரம் படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    அங்கு இதுவரை ஓட்டல்கள் எதையும் ஆஸ்பத்திரிகளாக மாற்றவில்லை. தேவைப்பட்டால் போபாலிலும் ஓட்டல்களை அரசு தன்வசப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா பகுதியில் அதிகமாக பாதிப்பு உள்ளது. அங்கு 20 ஓட்டல்களை கைப்பற்றி கொரோனா தடுப்பு மையமாக மாற்றி இருக்கிறார்கள். அவற்றில் 1500 அறைகள் இருக்கின்றன.

    ஜெய்ப்பூரில் ஓட்டல்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், பல்கலைக்கழக விடுதிகள், சமுதாய கூடங்கள், பொழுது போக்கு கூடங்கள், தர்ம சாலைகள் ஆகியவற்றை அரசு தன்வசப்படுத்தி 10 ஆயிரம் படுக்கைகளை உருவாக்கி உள்ளது.

    இதேபோல சத்தீஸ்கர் மாநிலத்திலும் பல ஓட்டல்களை கைப்பற்றி இருக்கிறார்கள். இதைபின்பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் ஓட்டல்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×