search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    திருப்பதி கோவில் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

    கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் திருமலையைச் சுற்றி உள்ள சேஷாசலம் வனப்பகுதிக்குள் நுழைத்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    திருப்பதி:

    திருப்பதி, திருமலையை சுற்றி உள்ள சேஷாசலம் மலை அடர்ந்த வனப்பகுதியாகும், அங்கு சிறுத்தைப்புலிகள், மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலை அடுத்த பார்வேடு மண்டபம் அருகில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்தன.

    அந்தப் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் 'ஸ்ரீ கந்தம்' எனப்படும் மஞ்சள் சந்தனமரக்கன்றுகளை பிடுங்கி நாசம் செய்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பதி தேவஸ்தான மற்றும் அரசு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பட்டாசுகள் மற்றும் அதிர்வேட்டுகள் வெடித்தும், டிரம்ஸ் அடித்தும் யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதை தொடர்ந்து யானைகள் கூட்டம் ஆகாசகங்கை, குமாரதாரா, பசு புதாரா ஆகிய அணைகள் வழியாக மெல்ல ஊர்ந்து காட்டுக்குள் சென்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே இதுவரை காட்டுயானைகள் வந்ததில்லை. கடந்த ஒரு வாரமாக காட்டுயானைகள் திருமலையைச் சுற்றி உள்ள சேஷாசலம் வனப்பகுதிக்குள் நுழைத்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனப்பகுதியில் உள்ள கண்காணிப்புகோபுரத்தில் இருந்தபடியே வனத்துறை ஊழியர்கள் நோட்டமிட்டு வருகின்றனர். காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
    Next Story
    ×