search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 2-வது நோயாளியும் குணமானார்

    கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான ஆலப்புழா மற்றும் காசர்கோட்டை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களும் குணமானதையடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இருந்து சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவ-மாணவிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயந்து ஊர் திரும்பினர்.

    சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்கள் அனைவருக்கும் கேரள சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான முதல் நபரான இவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவரைப் போல ஆலப்புழா மற்றும் காசர்கோட்டை சேர்ந்த மேலும் 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கேரள சுகாதாரத்துறையின் தீவிர சிகிச்சை காரணமாக ஆலப்புழா மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமானது. புனே ரத்த மாதிரி சோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு ஆலப்புழா மாணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இந்த நிலையில் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குணமானது தெரிய வந்துள்ளது. நேற்று இவரது ரத்த மாதிரி சோதனை முடிவுகள் புனேவில் இருந்து வந்தது. இதில் நோய் குணமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து காசர்கோடு மாணவரும் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதனை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மாணவர் அவரது வீட்டில் அடுத்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதிகாரிகள் கூறினர். இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 3 பேரில் 2 பேர் குணமாகி உள்ளனர்.

    திருச்சூர் மாணவியின் இறுதி சோதனை முடிவு இன்னும் வந்து சேரவில்லை. அந்த முடிவில் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தால் அவரும் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என அதிகாரிகள் கூறினர். தற்போது திருச்சூர் மாணவியின் உடல் நிலையும் சீராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×