search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா
    X
    பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா

    ஜேடியூ கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா அதிரடி நீக்கம்

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மூத்த தலைவர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்திவருகிறது. இந்த கூட்டணியின் மூலமாக ஜேடியூ கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநில முதல்மந்திரியாக செயல்பட்டுவருகிறார். 

    ஜேடியூ கட்சியின் துணை தலைவராக பிரபல அரசியல் ஆலோசகரர் பிரசாந்த் கிஷோரும், பொதுச்செயலாளராக பவன் வர்மாவும் செயல்பட்டுவருகின்றனர்.

    இதற்கிடையில், குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டு விவகாரங்களிலும் ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பாஜக-வுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். 

    மேலும், தற்போது டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜக-வுக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    ஆனால், சிஏஏ மற்றும் என்பிஆர் விவகாரத்தில் நிதிஷ் குமார் பாஜக-வுக்கு ஆதரவு அளித்ததை பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா நேரடியாக விமர்சனம் செய்தனர். இதனால் ஜேடியூ கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவிவந்தது. 

    நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர்

    இந்த விவகாரம் முற்றிய நிலையில் கட்சி தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் கூறுகையில், '' பிரசாந்த் கிஷோரும், பவன் வர்மாவும் அவர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அங்கு செல்லலாம். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை’’ என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கட்சி தலைவர், கட்சி எடுத்த முடிவு மற்றும் கட்சி நடைமுறைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணங்களால் பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, ஜேடியூ-வில் இருந்து நீக்கப்பட்ட அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' நன்றி நிதிஷ் குமார். பீகார் முதல் மந்திரி பதவியை தக்கவைத்துக்கொள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். கடவுள் உங்களை வாழ்த்துவார்’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×