search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதிஷ்குமார்
    X
    நிதிஷ்குமார்

    தேசிய மக்கள் தொகை பதிவேடு குழப்பத்தை ஏற்படுத்தும்- நிதிஷ்குமார் திடீர் எதிர்ப்பு

    என்.ஆர்.சி.யை பீகார் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    பாட்னா:

    நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி மத்தியிலும், பீகாரிலும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

    பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய ஜனதாதள கட்சி ஆதரவாக வாக்களித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் கிஷோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு (என்.ஆர்.சி) பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்து தங்களது மாநிலத்தில் அமல் படுத்தமாட்டோம் என்று அறிவித்தார்.

    இதற்கிடையே நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்.) நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. பல புதிய ஆவணங்கள் கேட்பதால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதிய முறையில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தேசிய மக்கள் தொகை படிவத்தில் பெற்றோரின் பிறந்த இடம், ஆதார் ஆகிய கேள்விகள் அவசியமற்றது. அவற்றை கைவிட கோரி பாராளுமன்றத்தில் எங்களது எம். பி.க்கள் வலியுறுத்துவார்கள்.

    பெற்றோரின் பிறந்த இடத்தை கேட்க என்ன அவசியம் இருக்கிறது. அரசு ஆவணங்களில் ஏற்கனவே ஆதார் விவரங்கள் உள்ளதால் அதனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய முறை குழப்பத்தை ஏற்படுத்தும்.

    தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைக்கு தொடக்கத்தில் இருந்தே ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    என்.ஆர்.சி.யை பீகார் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம். இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பது திருப்தி அளிக்கிறது.

    குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு சொற்ப அதிகாரமே உள்ளது. இந்த சட்டம் அரசியல் அமைப்பு படி செல்லுமா? என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க உள்ளது. எனவே இதற்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×